100 நாளாகியும் அதிமுக ஆட்சி தொடர்வது தான் சாதனை - பொன்.ராதாகிருஷ்ணன்
அதிமுக அரசு 100 நாள் சாதனை என கூறுவதை ஏற்க முடியாது. 100 நாளாகியும் ஆட்சி தொடர்வது தான் சாதனையாக இருக்க முடியும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மத்திய கப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்து இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தியபோதும், அதன் விலை அதிகப்படியாக உள்ளது. மணல் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்த 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு தரப்பில் இதற்கு ஒத்துழைப்பு இல்லை. அதனால் பணிகள் தாமதமாகிறது. மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் 7 ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது. தற்போது அந்த பணிகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக அரசு 100 நாள் சாதனை என கூறுவதை ஏற்க முடியாது. 100 நாளாகியும் ஆட்சி தொடர்வது தான் சாதனையாக இருக்க முடியும். பால்வளத்துறை அமைச்சர் தன்னுடைய துறையில் உள்ள குறைகளை போக்க வேண்டுமே தவிர, சவால் விடுக்கும் செயலில் ஈடுபடக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

