பாஜக பிரமுகரை தாக்கிய திமுக எம்.பி.யை கைது செய்யக்கோரி தர்ணா - பொன்.ராதாகிருஷ்ணன் கைது

பாஜக பிரமுகரை தாக்கிய திமுக எம்.பி.யை கைது செய்யக்கோரி தர்ணா - பொன்.ராதாகிருஷ்ணன் கைது
பாஜக பிரமுகரை தாக்கிய திமுக எம்.பி.யை கைது செய்யக்கோரி தர்ணா - பொன்.ராதாகிருஷ்ணன் கைது
பாஜக பிரமுகரை தாக்கிய திமுக எம்பியை கைது செய்யக்கோரி முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சாலையில் அமர்ந்து தனது ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே ஆவரைக்குளத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் பாஸ்கரை, திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஹோட்டலில் வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் தாக்குதல் நடைபெற்ற ஹோட்டலில் இருந்த சிசிடிவி கேமராக்களை நாடாளுமன்ற உறுப்பினர் எடுத்துச் சென்றதாகவும் பாஜகவினர் குற்றம்சாட்டினர். எம்பி தாக்கியதாக கூறப்படும் பாஜக பிரமுகர் பாஸ்கர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன்.ராதாகிருஷ்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஸ்கரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்நிலையில், இவ்விவகாரத்தில் திமுக எம்பி ஞானதிரவியம் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் எனக்கோரி பொன். ராதாகிருஷ்ணன் நேற்றிரவு நெல்லை சந்திப்பில் உள்ள பாரதியார் சிலை முன்பு சாலையில் அமர்ந்து தனது ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கு வந்த போலீசார், தாக்குதல் சம்பவம் தொடர்பாக பணகுடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று விளக்கம் தெரிவித்தனர்.
இருப்பினும் சட்டப்பிரிவு 307ன் கீழ் வழக்குப்பதிவு செய்து எம்பியை கைது செய்ய வேண்டும் என்று பொன். ராதாகிருஷ்ணன் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் போராட்டத்தை கைவிடாததால் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பாஜகவினர் 5 பேரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''இங்கு என்னை போராடக் கூடாது என தெரிவிக்கின்றனர். எஃப்ஐஆர் போடப்பட்டாலும் நாங்கள் கேட்டபடி 307ன் கீழ் நெல்லை எம்பி ஞானதிரவியம் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும். என்னை கைது செய்தாலும் உண்ணாவிரதம் இருப்பேன்'' என்றார்.
இதற்கிடையில், பணகுடி காவல் நிலைத்தில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் மற்றும் அவரது மகன்கள் தினகரன் ராஜா உள்பட 30 பேர் மீது 147, 294 b, 323, 506 (ii) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com