தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்: பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்பு
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் துவங்கலாம் என்ற நீதிமன்றத்தின் உத்தரவிற்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் துவங்குவதற்கு தடையில்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், படிப்பில் திறமை வாய்ந்த ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கவே நவோதயா திட்டம் தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் தமிழகத்திலும் நவோதயா பள்ளிகளை துவங்க அனுமதி வழங்குமாறு தமிழக முதலமைச்சர்களை சந்தித்து வேண்டுகோள் விடுத்ததாகவும், ஆனால் தமிழக அரசு இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை, தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை துவங்கலாம் என உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என கூறியுள்ளார். இதன் மூலம் ஏழை, எளிய மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.