மத்திய அரசு மீது நம்பிக்கை வையுங்கள்: விவசாயிகளுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்
மத்திய அரசு மீது விவசாயிகள் நம்பிக்கை வைக்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
டெல்லியில் 29-ஆவது நாளாக போராடி வரும் விவசாயிகளை தேமுதிக-வின் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்ததுடன் அவர்களோடு அமர்ந்து மண் சோறு சாப்பிடும் போராட்டத்திலும் ஈடுபட்டார்.
இதனைத்தொடர்ந்து, விவசாயிகள் மேற்கொண்டு வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அலுவலகத்தில் அய்யாகண்ணு உள்ளிட்ட விவசாய பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, விவசாயிகள் போராட்டம் உணர்வுபூர்வமானது என குறிப்பிட்ட பொன் ராதாகிருஷ்ணன், போராட்டத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார். மத்திய அரசு மீது விவசாயிகள் நம்பிக்கை வைக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், விவசாயிகளின் கோரிக்கை மனுவை பிரதமரிடம் கொண்டு செல்வதாகவும் உறுதி அளித்தார்.
இந்நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் ஜந்தர்மந்தரில் போராட்டம் தொடரும் என்று விவசாயி அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.