கொள்ளையடிக்கப்பட்ட மக்கள் பணம் மீட்கப்படுகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழக மக்களின் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மீட்கும் முயற்சியில் வருமான வரித்துறை ஈடுபட்டுள்ளதை வரவேற்பதாகவும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சசிகலாவின் குடும்பத்தினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற சோதனையை தொடர்ந்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதற்கு அரசியல் தலைவர்களும் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடி ஒட்டப்பிடாரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “இந்த சோதனை ஒரு குடும்பத்தின் மீது நடத்தப்படுவதாகவோ அல்லது ஒரு கட்சி மீது நடத்தப்படுவதாகவோ பார்க்கக் கூடாது. தமிழக மக்களின் பணம் தவறான முறையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதனை மீட்கும் முயற்சியில் வருமான வரித்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். அதைத்தவிர்த்து இதை ஒரு குடும்பத்தின் மீது நடத்தப்படும் சோதனையாக பார்க்கக்கூடாது” என்று கூறினார்.