ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்காக வழங்கப்பட்ட அனுமதியை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் திரும்பப் பெற்றுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நூறாவது நாள் போராட்டத்தில் அதாவது கடந்த மே மாதம் 22-ஆம் தேதி போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து வன்முறை ஏற்பட்ட நிலையில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்காக வழங்கப்பட்ட அனுமதியை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் திரும்பப் பெற்றுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையின் 2-ஆவது யூனிட் கட்டுமான பணி மேற்கொள்ள ஏற்கனவே 2016-இல் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி தந்திருந்த நிலையில் அதனை தற்போது திரும்பப் பெற்றுள்ளது.