பொள்ளாச்சி | இரும்பு கேட் சரிந்து விழுந்து வடமாநில தொழிலாளி உட்பட இருவர் உயிரிழப்பு
செய்தியாளர்: ரா.சிவபிரசாத்
பொள்ளாச்சி அடுத்த அரசம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் காஸ்டிங் நிறுவனத்தின் பின்பகுதியில் ஒரு குடோனில் இரும்பு கேட் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்தப் பணியில் கிணத்துக்கடவு, சிக்கலாம் பாளையத்தைச் சேர்ந்த மகேந்திரன் (55) பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பூபேஷ் யாதவ் (18) உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தனர். கேட்அமைக்கும் பணிகளை காண்ட்ராக்டர் கோவை புதூரைச் சேர்ந்த மணிமுத்து பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் நின்று கொண்டிருந்த கேட் திடீரென சரிந்து விழுந்ததில் கீழே உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த மகேந்திரன், வட மாநில தொழிலாளி பூபேஷ்யாதவ் இருவர் மீது விழுந்து நசுக்கியது. அருகில் நின்ற காண்ட்ராக்டர் மணிமுத்துக்கு காலில் பலத்த காயம் ஏற்ப்பட்டது. இதையடுத்து காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மகேந்திரன், வட மாநில தொழிலாளி பூபேஷ்யாதவ் இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிததனர்.
இந்நிலையில், காயம் அடைந்த மணிமுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.