“பொள்ளாச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை” - தமிழிசை வலியுறுத்தல்
பொள்ளாச்சி பாலியல் கொடுமை தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணை வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் ஒரு கும்பல் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், மக்கள் மற்றும் நெட்டிசன்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் இந்தச் சம்பவத்திற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. அனைவரும் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழிசை, “பொள்ளாச்சியில் நடைபெற்றதாக வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. பெண்ணினம் கசக்கப்படுவதையும் நசுக்கப்படுவதையும் துளியும் ஏற்றுக்கொள்ள முடியாது. பாதிக்கப்பட்ட பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும். சரியான விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். சிறப்பு புலனாய்வு வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
திமுக எம்பி கனிமொழி, “பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறைச் சம்பவம் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதையே உணர்த்துகிறது. இந்தக் கூட்டத்தையும், இதில் சம்பந்தப்பட்டவர்களையும், அரசும் அமைச்சர்களும் காப்பாற்ற முனையாமல், சிறப்பு நீதிமன்றத்தை நிறுவி, உடனடியாக குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்” என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.