பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கைதானவர்களுக்கு விதிகளைமீறி சலுகை: 7 காவலர்கள் சஸ்பெண்ட்

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கைதானவர்களுக்கு விதிகளைமீறி சலுகை: 7 காவலர்கள் சஸ்பெண்ட்
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கைதானவர்களுக்கு விதிகளைமீறி சலுகை: 7 காவலர்கள் சஸ்பெண்ட்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்களை விதிகளை மீறி உறவினர்களிடம் பேச அனுமதித்த சம்பவத்தில் 7 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரி ராஜன், மணிவண்ணன், வசந்த் குமார் , சதீஷ், பாபு , ஹேரேன் பால், அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேர் நேற்று கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கினை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி, வழக்கு விசாரணையை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும் கடந்த 21ஆம் தேதி குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டதில், விடுபட்ட குற்றப்பத்திரிகை நகல்களின் சில நகல்கள் 9 பேரிடமும் வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்றத்தில் அளித்த, ரகசிய வாக்குமூலத்தின் (161,164 ஸ்டேட்மென்ட்) நகல்கள் கைதான 9 பேருக்கும் வழங்கப்பட்டது.
கைதானவர்களுக்கு சலுகை
இந்நிலையில் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட, குற்றம்சாட்டப்பட்டவர்கள் இருந்த காவல் துறை வாகனம், கோவை சித்ரா விமான நிலையம் அருகே திடீரென நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, அங்கு காத்திருந்த குற்றம்சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் அவர்களை சந்தித்து உரையாடினர். குறிப்பாக, பாலியல் வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாக சந்தேகிக்கப்படும், சபரி ராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன், வசந்த் குமார், சதீஷ் ஆகிய 5 பேர் அந்த வாகனத்தில் இருந்தனர். உறவினர்களிடம் அவர்கள் பேசிய பின்னர், அந்த வாகனம் சேலம் மத்திய சிறையை நோக்கி சென்றது.
தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களை, நீதிமன்றத்திலிருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உறவினர்களைப் பார்க்க அனுமதித்தது ஏன் என்றும், எந்த அடிப்படையில் இதுபோன்ற சலுகைகள் அவர்களுக்கு காட்டப்பட்டது என்பதும் மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்கள் உறவினர்களை சந்திக்க வேண்டும் என்றால், முறையாக, நீதிமன்றத்தின் முன் அனுமதியைப்பெற வேண்டும். ஆனால், கொடூர பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உறவினர்கள் சந்தித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 
7 காவலர்கள் 'சஸ்பெண்ட்'
இந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்களை விதிகளை மீறி உறவினர்களிடம் பேச அனுமதித்த சம்பவத்தில் 7 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சம்மந்தப்பட்ட ஏழு பேரிடம் துறை ரீதியான விசாரணை நடத்தவும் சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com