பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் திமுக நிர்வாகி மகனுக்கு சம்மன்
பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் திமுக தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜின் மகன் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திருநாவுக்கரசு உட்பட 4 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதை அடுத்து திருநாவுக்கரசை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். வாக்குமூலத்தின் அடிப்படையில் பல பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பொள்ளாச்சியில் திமுக மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மகன் மணிமாறனுக்கு, சிபிசிஐடி போலீசார் வரும் 28ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. திருநாவுக்கரசிடம் திமுக மாவட்டச் செயலர் மகன் மணிமாறன் நன்றாக பழகி வந்ததாகவும், ஃபேஸ்புக் மூலம் திருநாவுகரசிடம் பல தொடர்பு இருப்பதாகவும் புகார் எழுந்தது.
இதனால் சிபிசிஐடி போலீசார் அவரை விசாரிக்க சம்மன் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ள பார் நாகராஜக்கும் வரும் 28ம் தேதி சிபிசிஐடி காவல் துறையிடம் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.