பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐக்கு உதவ தமிழக காவல்துறை தயார் என நீதிமன்றத்தில் தகவல்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐக்கு உதவ தமிழக காவல்துறை தயார் என நீதிமன்றத்தில் தகவல்
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐக்கு உதவ தமிழக காவல்துறை தயார் என நீதிமன்றத்தில் தகவல்

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ விரைந்து விசாரித்து முடிக்க அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாக தமிழ்நாடு காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், ஆசிரியைகள் உள்ளிட்ட பலரை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்த கும்பல் மிரட்டி பணம் பறித்ததாக எழுந்த புகார், தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை எற்படுத்தியது. இதையடுத்து கல்லூரி மாணவியின் சகோதரர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்து பாலியல் கொடுமை வழக்கில், திருநாவுக்கரசு, ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், பொள்ளாச்சி அதிமுக நகர மாணவரணிச் செயலாளர் அருளானந்தம், ஹேரேன் பால், பாபு என்கிற பைக் பாபு ஆகியோர் கைதாகினர். இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி பாலியல்  வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில், அருளானந்தம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கெனவே இந்த வழக்கில் கோவை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், ஆனால், சில விளக்கங்களை நீதிமன்றம் கேட்டு வருவதாகவும் தெரிவித்தார். சிபிஐ-யில் ஆட்கள் பற்றாக்குறையால், வழக்கு விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.

அப்போது ஆஜராகியிருந்த தமிழ்நாடு காவல்துறை தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ விரைந்து முடிக்க தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும், குறிப்பாக எஸ்.பி. அந்தஸ்திலான ஒரு அதிகாரியை நியமித்து உதவத் தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com