பொள்ளாச்சி வழக்கை தீர விசாரிக்காமலேயே ஏன் இவ்வளவு அவசரம் ? மா.சுப்பிரமணியன் கேள்வி
பொள்ளாச்சி வழக்கை தீர விசாரிக்காமலேயே இவ்வளவு அவசரமா உங்களை அறிக்கை கொடுக்கச் சொன்ன சக்தி எது..? என கோவை எஸ்.பி.க்கு சைதாப்பேட்டை எம்எல்ஏவான மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான வழக்கில் 4 பேர், பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களை மிரட்டியதாக 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்படும். கைது செய்யப்பட்டவர்களை தவிர வேறு யாருக்கும் இதில் தொடர்பில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையை அணுகி புகாரளிக்கலாம். இந்தச் சம்பவத்தில் அரசியல் கட்சியினர் யாருக்கும் தொடர்பில்லை. தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உண்மையை சொல்வதென்றால், தன்னுடைய தொகுதி என்பதால் அவரே (பொள்ளாச்சி ஜெயராமன்) கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்னிடம் வலியுறுத்தினார்.” என கூறியிருந்தார்.
இந்நிலையில் பொள்ளாச்சி வழக்கை தீர விசாரிக்காமலேயே இவ்வளவு அவசரமா உங்களை அறிக்கை கொடுக்கச் சொன்ன சக்தி எது..? என கோவை எஸ்.பி.க்கு சைதாப்பேட்டை எம்எல்ஏவான சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுப்பிரமணியன், “ ``100 சதவிகிதம் அரசியல் வாரிசுகளுக்குத் தொடர்பில்லை என பொள்ளாச்சி வழக்கில் கோவை எஸ்.பி பேட்டி அளித்துள்ளார். வழக்கை தீர விசாரிக்காமலேயே இவ்வளவு அவசரமா உங்களை அறிக்கை கொடுக்கச் சொன்ன சக்தி எது சார்....?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினரை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாகராஜ் என்பவரை கட்சியிலிருந்து அதிமுக நீக்கியுள்ளது. கட்சியின் கொள்கைக்கும் கோட்பாட்டிற்கும் களங்கும் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் நாகராஜ் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.