பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு - சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு?
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை சிபிஐக்கு பரிந்துரை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஃபேஸ்புக் மூலம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அதை வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு உள்பட 4 பேர் சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவத்துக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பொள்ளாச்சியில் நடந்துள்ள இந்தப் பாலியல் கொடூரத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். சில அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. சிலர் போராட்டங்களுக்கு அறிவிப்பு விடுத்துள்ளனர்.
இதனிடையே, வழக்கு விசாரணை தொடர்பாக காவல்துறையினர் மெத்தனமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன. அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பில் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக டிஜிபி அலுவலகம், தமிழக அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப ரீதியான ஆதாரங்களை திரட்டி விசாரணை நடத்த வேண்டியிருந்ததால்தான் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பெண் அதிகாரியை நியமித்து விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், வழக்கில் மேலும் கூடுதலான விசாரணை தேவைப்படும் என்ற கோணத்தில் சிபிஐக்கு பரிந்துரைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பொள்ளாச்சி பாலியல் கொடூர விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் எனப் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தமிழக அரசு இந்த முடிவினை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.