குழந்தை விற்பனை விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட்டு, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை மற்றும் கடத்தல் பற்றிய செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். குழந்தை விற்பனை கும்பலின் பின்னால் பெரிய சட்டவிரோத சங்கிலிப் பிணைப்பு இருப்பதாக வெளியாகும் தகவல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார். எனவே, இவ்விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றமே தலையிட்டு விசாரணை நடத்த சிறப்பு குழு அமைக்க வேண்டும் என்றும் அந்த விசாரணையை உயர்நீதிமன்றமே கண்காணிக்க வேண்டும் எனவும் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல், குழந்தைகளை பேரம்பேசி விற்பனை செய்வது மனசாட்சிக்கு விரோதமானது என்றும் இச்செயலில் ஈடுபட்டவர்கள் ஈவு இரக்கமற்றவர்கள் என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். மேலும், குழந்தை விற்பனை தொடர்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகள், தரகர்கள் என அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வாசன் வலியுறுத்தியுள்ளார்.