அரசியல்வாதிகளின் வதந்தியால் ரஜினி பயணம் ரத்து: லைக்கா சாடல்
தமிழக அரசியல்வாதிகள் சிலர் பரப்பிய பொய்களாலும் வதந்திகளாலும்தான் ரஜினியின் இலங்கை பயணம் ரத்தானதாக லைக்கா ஃபவுண்டேஷன் நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தங்கள் நிறுவனத்துக்கும் முன்னாள் இலங்கை அதிபர் ராஜபட்சேவுக்கும் வணிக ரீதியில் உறவு இருப்பதாகத் தொழிற் போட்டியாளர்களால் வதந்திகள் கிளப்பப்பட்டு வருவதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்களைப் பற்றி வெளியாகும் குற்றச்சாட்டுகள் தவறானவை என்று ஏற்கனவே தாங்கள் நிரூபித்துள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. தொழிற் போட்டியாளர்களிடம் இருந்து தமிழக அரசியல்வாதிகள் சிலர் ஆதாயம் பெறுவதாக தாங்கள் சந்தேகிப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் வாடி வரும் தமிழர்களுக்காக, இந்த அரசியல்வாதிகள் ஒன்றும் செய்யவில்லை என்றும் லைகா தெரிவித்துள்ளது. எனினும் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்காக தாங்கள் தொடர்ந்து பாடுபடப் போவதாகவும் இதில் அரசியல் ரீதியான உள்நோக்கம் எதுவுமில்லை என்றும் லைகாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரஜினியின் பயணம் ரத்தானதால் வரும் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறவிருந்த வீடு வழங்கும் விழாவை ரத்து செய்வதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் தமிழர்களுக்காக கட்டப்பட்ட 150 வீடுகளும் அவர்களிடமே ஒப்படைக்கப்படும் என்றும் லைகா கூறியுள்ளது.