‘பாஜகவுக்கு பல்லக்கு தூக்க ரஜினி தயாராகிவிட்டார்’ - சிஏஏ குறித்த கருத்துக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு..!

‘பாஜகவுக்கு பல்லக்கு தூக்க ரஜினி தயாராகிவிட்டார்’ - சிஏஏ குறித்த கருத்துக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு..!
‘பாஜகவுக்கு பல்லக்கு தூக்க ரஜினி தயாராகிவிட்டார்’ - சிஏஏ குறித்த கருத்துக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு..!

சிஏஏவுக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் பேசியது குறித்து பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் “சிஏஏவால் இஸ்லாமியர்களுக்கு பிரச்னை என பீதி கிளப்பப்பட்டுள்ளது. சுய லாபத்திற்காக அரசியல் கட்சிகள் தூண்டிவிடுகின்றன. என்பிஆர் அவசியம் தேவை. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால்தான் யார் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியும். இஸ்லாமியர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் வந்தால் முதல் ஆளாக நான் எதிர்ப்பேன்.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும். மாணவர்கள் ஒரு போராட்டத்தில் இறங்குவதற்கு முன்பு யோசித்து முடிவெடுத்து பின் இறங்க வேண்டும். இல்லையென்றால் அவர்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்திக்கொள்ளும். யோசிக்காமல் முடிவெடுத்தால் மாணவர்களுக்குத்தான் பிரச்னை” எனத் தெரிவித்தார். ரஜினியின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து மானாமதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம் எம்பி, “ரஜினி தனிக்கட்சி தொடங்கத் தேவையில்லை. ரஜினி பாஜகவில் இணைவதுதான் நல்லது. அவரது வெளிப்பாட்டை கூறியது நல்லது. ரஜினி பாஜகவின் ஆதரவாளர் என்பது வெளிப்படையாக தெரிகிறது. பாஜகவின் பொம்மலாட்டத்திற்கு ரஜினி செவி சாய்க்கிறார்” எனத் தெரிவித்தார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “உடன் இருப்பவர்கள் கூறுவதை நம்பி பேசுவதால் ரஜினிகாந்த் பல விளைவுகளை சந்தித்து வருகிறார். இதேநிலை தொடர்ந்தால் வீழ்ச்சியை நோக்கி தள்ளப்படுவீர்கள் என எச்சரிக்கிறேன். அரசியல் வேறு, சினிமா வேறு. பாஜகவுக்கு பல்லக்கு தூக்க ரஜினிகாந்த் தயாராகிவிட்டார். அவரின் ஆன்மிக அரசியல் முகமூடி இன்றைக்கு அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ரஜினிக்கு ஏற்படப்போகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் பாஜகவின் ஊதுகுழல் என்பது கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகி வருவதாக ரவிக்குமார் எம்பி விமர்சித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தெரிந்த விஷயங்களை மட்டுமே பேச வேண்டும் என்றும் தெரியாத விஷயங்களில் மவுனமாக இருப்பது அவருக்கு மரியாதையை தரும் எனவும் மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com