தமிழரின் உள்ளங்களில் மகிழ்ச்சி நிறையட்டும் - பொங்கல் வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள்!
உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் தைத்திருநாள் நல்வாழ்த்துகளை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர், தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“ உழவே தலை என உழுதுண்டு உலகத்தார்க்கு உண்டி கொடுக்கும் உழவர் பெருமக்களுக்கும் - உலகெங்கும் வாழும் தமிழ் உடன்பிறப்புகளுக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்!
உதயசூரியனின் ஒளியெனத் தமிழரின் உள்ளங்களில் மகிழ்ச்சி நிறையட்டும்! புதுப்பானையில் #தைப்பொங்கல் பொங்குவதுபோல் வாழ்வில் இன்பம் பொங்கட்டும்!” என்று பதிவிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி
”உலகத் தமிழர்கள் அனைவரும் அன்பு பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், மக்கள் அனைவரும் குன்றா நலமும், குறையா வளமும், மங்கா புகழும், மாசிலா செல்வமும் பெற்று நிறை வாழ்வு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
மநீம கமல்ஹாசன்
”வரப்பை உயர்த்தினால் நீர் உயர்ந்து, நெல் செழித்து, வாழ்வு வளம் பெறும், நாடு நலம் பெறும் என்பதை உணர்ந்தவர்கள் தமிழர்கள்.
அறுவடைத் திருநாளில் நம் உழைப்பை உயர்த்துவோம், சிந்தனையின் தரத்தை உயர்த்துவோம். பொங்கல் திருநாளில் அன்பு பொங்கட்டும்.”
கேரள முதல்வர் பினராயி விஜயன்
”செழிப்பையும், பெரும்வளத்தையும், முன்னேற்றத்தையும் சாத்தியப்படுத்துவது கூட்டுழைப்பும் ஒற்றுமையுமே என்று அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை நமக்கு உணர்த்துகிறது. பொங்கல் பண்டிகையை கொண்டாடும் இவ்வேளையில் சந்தோசமான, ஒளிமயமான சமத்துவ எதிர்காலத்தை அடைவதற்காக நாம் ஒன்றிணைந்து நிற்போம். என் தமிழ் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் உளங்கனிந்த பொங்கல் வாழ்த்துகள்.”