பற்றி எரியும் சனாதன பேச்சு விவகாரம்: உதயநிதிக்கு எதிராக, ஆதரவாக வலுக்கும் குரல்கள்! முழு தகவல்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதனம் குறித்த கருத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு நிலவி வருகிறது.
உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்ட்விட்டர்

சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ’சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் வேலையாக இருக்கவேண்டும்’ எனப் பேசியிருந்தார். இதற்கு நாடு முழுவதும் பாஜகவினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் சிலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி போலீஸில் புகார்

மேலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார். எனினும், ’சனாதனத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எங்களது தீர்மானத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம்’ என உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

உதயநிதிக்கு எதிராக அமித்ஷாவின் பேச்சு!

தொடர்ந்து உதயநிதியின் பேச்சு இந்திய அரசியலில் புயலைக் கிளப்பிய நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். நேற்று ராஜஸ்தான் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித்ஷா, “தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகன் அமைச்சர் உதயநிதி, சனாதன தர்மத்தை ஒழிப்பது குறித்து பேசியிருக்கிறார். இதுபோன்ற பேச்சுகள், இந்து மதத்தையும், நமது கலாச்சாரத்தையும் I-N-D-I-A கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் வெறுக்கின்றனர் என்பதைத் தெளிவாக்குகிறது.

கேள்வி எழுப்பிய பாஜக தலைவர்கள்!

மேலும், அவர்களுடைய பேச்சு இந்து மதத்தின் மீதும் நமது கலாச்சாரத்தின் மீதும் நடத்தப்படும் தாக்குதலாகும். உதயநிதியின் பேச்சு வாக்கு வங்கிக்காக நடத்தப்படுகிறது. மற்றவர்களை சமாதானப்படுத்துவதற்கான தந்திரம். தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக காங்கிரஸ் கட்சி எந்த எல்லைக்கும் செல்லும்” எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். ‘‘உதயநிதியின் பேச்சை I-N-D-I-A கூட்டணியில் உள்ள தலைவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்களா” என்று பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

சனாதனம் குறித்து விளக்கம் அளித்த உதயநிதி ஸ்டாலின்!

இதனால் இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்தது. இதுதொடர்பாக மீண்டும் விளக்கம் அளித்த உதயநிதி ஸ்டாலின், “சனாதனத்தையே தாம் எதிர்ப்பதாகவும், சாமி கும்பிடுவதை எதிர்க்கவில்லை. எந்த மதத்திற்கும் எதிராக, தான் எதையும் கூறவில்லை. தான் பேசியதைத் திரித்துக்கூறி வேண்டுமென்றே சிலர் சூழ்ச்சிகளை செய்துவருகின்றனர்” என விளக்கம் அளித்திருந்தார்.

காங்கிரஸ், வி.சி.க. கட்சிகள் ஆதரவு!

இதற்கு திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளான காங்கிரஸ், விடுதலைச் சிறுதைகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், “சமதர்ம சமுதாயம் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. கருத்து சொல்ல ஒவ்வொரு கட்சிக்கும் சுதந்திரம் உண்டு; அனைவரது நம்பிக்கையையும் மதிக்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.

அதுபோல் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, “மூடநம்பிக்கையற்ற மதம் வேண்டும் என விவேகானந்தரே கூறியுள்ளார். சனாதனம் குறித்த உதயநிதியின் கருத்தை ஆதரிக்கிறேன்” எனப் பதிலளித்திருந்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், “சனாதனத்தை ஒழிப்பது இன்றியமையாத தேவை, தொற்றுநோயைப்போல இதையும் ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பேசியதை, இன்றைக்கு அகில இந்திய அளவில் ஒரு பிரச்னையாக, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்றவர்களே பேசும் நிலை உருவாகியிருக்கிறது.

சனாதனத்தை ஒழிப்பது என்பது ஒரு கருத்தியலை, கோட்பாட்டை எதிர்த்துப் பேசுகிற ஒன்றாகும். ஆனால், அது ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் எதிரானது என்பதைப்போல ஒரு திரிபுவாதத்தை, பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்களே பேசுவது வியப்பாக இருக்கிறது. சனாதனம் சமத்துவத்துக்கு எதிரானது என்பதால்தான் அது விமர்சனத்துக்குள்ளாகிறது என்பதை அமைச்சர்களே புரிந்து கொள்ளாமல் தங்களின் அரசியல் ஆதாயத்துக்காக விமர்சனம் செய்வது, எந்த வகையிலும் ஏற்புடையதல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

”சனாதனத்தை ஒழிக்க முடியாது” - ஆளுநர் தமிழிசை

அதேநேரத்தில் உதயநிதியின் சனாதன குறித்த பேச்சுக்கு பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன், ”சனாதனத்தை உதயநிதி அல்ல, வேறு யாராலும் அழித்து ஒழித்துவிட முடியாது. நீங்கள் சனாதனம் பற்றி பேசப்பேச, அது இன்னும் வளர்ந்து கொண்டேதான் இருக்கும். இன்னும் சொல்லப்போனால், ஒரு குறிப்பிட்ட மக்கள் சனாதனத்தைப் பின்பற்றுகிறார்கள். அவர்களைப் புண்படுத்த வேண்டாம். நீங்கள் (திமுக) சில பேரை புண்படுத்தக்கூடாது என்று பல பேரைப் புண்படுத்தினால் எப்படி? சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். பிறகு எதற்கு இந்து அறநிலையத்துறையை வைத்திருக்கிறீர்கள்?

உங்களுக்கு இந்துக் கோயில் வேண்டாம்; சாமி வேண்டாம். ஆனால் உண்டியல் மட்டும் வேண்டும் என சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

கேள்வி எழுப்பிய நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ”சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, அதற்கு மேடையில் இருந்த தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு எதிர்ப்புத் தெரிவிக்காதது ஏன்” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

”காங்கிரஸ் கட்சி திமுக உடனான உறவுகளைத் துண்டித்துக் கொள்ளாவிட்டால், அந்த கட்சி இந்துகளுக்கு எதிரானது என்பது நிரூபணமாகும். இவ்விவகாரம் ராகுல் காந்திக்கு ஒரு சோதனை என்றும், சனாதனத்தை ஆதரிக்கிறாரா அல்லது எதிர்க்கிறாரா என்பது இதில் இருந்து தெரிய வரும்” என அசாம் மாநில முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

பாஜக செய்தித் தொடர்பாளர் சேஷாக்பூரி வாலா, ”உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை நோயுடன் ஒப்பிட்டுப் பேசி உள்ளார். சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்பது இந்தியாவில் சனாதனத்தைப் பின்பற்றும் 80 சதவீத மக்களை இனப்படுகொலை செய்ய அழைப்பு விடுப்பது போன்றது ஆகும்” என்று கண்டனம் தெரிவித்து உள்ளார்.

”மதங்களை விமர்சிக்கக்கூடாது” - டி.ஜெயக்குமார்

அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், ”சனாதன சர்ச்சையில் காங்கிரஸ் தற்போது எடுத்துள்ள நிலைப்பாடு உறுதியானதல்ல. மதத்தை இழிவுபடுத்துவதைக் கண்டிக்கிறேன். இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை விமர்சிக்கக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே டெல்லி பா.ஜனதா தலைவர் வீரேந்திர சச்தேவா தலைமையிலான குழுவினர் இன்று டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்ல முதன்மை ஆணையர் ஆஷிஷ் சாட்டர்ஜியிடம் ஒரு கடிதத்தை கொடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கும்படி கூறினர். அந்த கடிதத்தில் சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன், ”தமிழ்நாடு இல்லத்தின் மூலமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புகார்க் கடிதம் அனுப்பியுள்ளோம். சனாதன தர்மம் குறித்துப் பேசிய அமைச்சர் உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்; அவர் கூறிய கருத்துக்களை அவர் திரும்பப்பெற வேண்டும். இதை செய்யாவிட்டால், உதயநிதி ஸ்டாலினை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் பீகார் மாநிலம் முசாபர்பூர் நீதிமன்றத்தில் சுதிர்குமார் ஓஜா என்பவர் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக புகார் அளித்துள்ளார். முசாபர்பூர் காவல் நிலையத்திலும் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், மகாராஷ்டிரா மாநில அமைச்சர் மங்கள் பிரபத் லோதா, “சனாதனம் குறித்த கருத்தை அமைச்சர் உதயநிதி வாபஸ் பெற வேண்டும். கருத்தை அவர் வாபஸ் பெறாவிட்டால் மகாராஷ்டிராவிற்குள் நுழைய முடியாது. கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை உதயநிதி புண்படுத்திவிட்டார்” என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com