மன்னிப்பு கேட்கமாட்டேன் என ரஜினி ஆவேசம்.. ஆதரவும்.. எதிர்ப்பும்..!

மன்னிப்பு கேட்கமாட்டேன் என ரஜினி ஆவேசம்.. ஆதரவும்.. எதிர்ப்பும்..!

மன்னிப்பு கேட்கமாட்டேன் என ரஜினி ஆவேசம்.. ஆதரவும்.. எதிர்ப்பும்..!
Published on

ஜனவரி 14-ஆம் தேதி துக்ளக் இதழின் 50-ஆவது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். இதில் 1971-இல் சேலத்தில் நடந்த நிகழ்வு குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து தமிழகத்தின் பல்வேறு காவல்நிலையங்களில் ரஜினிகாந்த் மீது புகாரளிக்கப்பட்டது. மேலும், ரஜினிகாந்த் தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து ரஜினிகாந்த் விளக்கமளித்தார். “ராமர், சீதை சிலைகள் உடையில்லாமல் ஊர்வலத்தில் எடுத்துவரப்பட்டதை பலரும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர். எனவே 1971-இல் சேலத்தில் நடந்த பேரணி குறித்து கற்பனையாக நான் எதுவும் கூறவில்லை. அதனால் என் பேச்சுக்கு மன்னிப்போ, வருத்தமோ கேட்க மாட்டேன். இது மறுக்கக் கூடிய சம்பவம் அல்ல. ஆனால் மறக்க வேண்டிய சம்பவம்" என்று தெரிவித்தார்.

ரஜினியின் இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த மூத்த பத்திரிகையாளரான கோலாகல ஸ்ரீனிவாஸ், “ இதற்கு ரஜினிகாந்த் வருத்தம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. தற்போது பரவும் கி.வீரமணி பேசிய காணொளி ஒன்றில், ராமர் படத்தை பெரியார் செருப்பால் அடித்ததாக கூறுகிறார். அப்படியானால் கி.வீரமணி பேசியது உண்மையா, பொய்யா என்பதை பார்க்க வேண்டும். அதனால் ரஜினி சரியாகவே சொல்லி இருக்கிறார். இந்த விவகாரத்தில் அவர் பின்வாங்கவேண்டிய அவசியம் இல்லை. இந்த விவகாரம் மூலம் ரஜினி போகவேண்டிய அரசியல் பாதை தெளிவாகியுள்ளது. பெரியார் எதிர்ப்பு அரசியல்தான் ரஜினி சிந்தாந்தமாகியுள்ளது” என தெரிவித்துள்ளார்.

ரஜினியின் கருத்துக்கு பத்திரிகையாளரான ஷ்யாம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “ பெரியார் தேர்தல் அரசியலுக்குள் வந்தது இல்லை. அதனால் பெரியாரை பயன்படுத்தி ஓட்டு வாங்க முடியாது. அது திமுகவுக்கும் தெரியும். ஆக, இப்போது ரஜினி பேசியது உண்மையா? பொய்யா? என்பதுதான் சர்ச்சை. அந்த சர்ச்சைக்கான பதில், ரஜினி சொன்னது கடைந்தெடுத்த பொய்” என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பேசிய கொளத்தூர் மணி, 1971-ல் நடந்த சம்பவம் குறித்து ஆதாரமாக துக்ளக்கை காட்டாமல் அவுட்லுக்கை ரஜினிகாந்த் காட்டியது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

யார் குறித்து ரஜினி பேசியது வரலாற்று பிழை என தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், ராமர் அவதாரங்களை பெரியார் மூர்க்கமாக விமர்சித்தார் என்பது வரலாற்று உண்மை. ஆனால் பெரியார் குறித்து ரஜினி கூறியது முற்றிலும் தவறானது என தெரிவித்தார்.

ரஜினி சொல்வதை தான் ஏற்றுக்கொள்வதாகவும், அது நடந்த உண்மையான சம்பவம் என்பதால் அவர் மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் பாஜகவின் கே.டி.ராகவன் தெரிவித்துள்ளார். மேலும் அப்போதே இந்த விவகாரம் தொடர்பாக காவல்நிலையங்களிலும் புகார் கொடுக்கப்பட்டது என்றும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com