விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழப்பு: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழப்பு: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழப்பு: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

தூத்துக்குடியில் விசாராணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை மற்றும் மகன் சிறையில் உயிரிழந்தது தொடர்பாக விஜயகாந்த், வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ்(31). இவர் செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 20-ந்தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடை திறந்து வைத்திருந்ததாகக் கூறி ஜெயராஜை போலீசார் திட்டியதாக தெரிகிறது. இதனால் போலீசாருக்கும் ஜெயராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த பென்னிக்ஸ் போலீசாரிடம் சமாதானம் பேச முயன்றுள்ளார். இதனால் பென்னிக்ஸுக்கும், போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விதிமுறைகளை மீறி கடை வைத்திருந்ததாக கூறி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதன் பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் 21-ந்தேதி அதிகாலையில் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, நேற்று இரவு திடீரென பென்னிக்ஸ் மயங்கி கீழே விழுந்துள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பென்னிக்ஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கூறியுள்ளனர். இதற்கிடையில் பென்னிக்ஸ் தந்தை ஜெயராஜும் அதிகமான காய்ச்சல் காரணமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரும் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த இரு மரணங்களும் தமிழகம் தழுவிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.


இந்நிலையில் இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் நாளை முழு கடையடைப்பு நடத்தப்படும் என வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த சம்பவம் குறித்து தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் இருவரும் மரணம் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தமிழக அரசு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இதே சம்பவம் தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “இது முழுக்க முழுக்க சாத்தான்குளம் காவல்நிலைய உதவி ஆய்வாளரும், காவல்துறையினரும் நடத்திய அப்பட்டமான படுகொலை என குற்றம் சாட்டுகிறேன். சாத்தான்குளத்தில் கைது செய்யப்பட்டவர்களை ரிமாண்ட் செய்து, தூத்துக்குடி கிளைச் சிறையிலோ அல்லது பாளையங்கோட்டை மத்திய சிறையிலோ அடைக்காமல், வெகு தூரத்தில் உள்ள கோவில்பட்டி கிளைச் சிறைக்குக் கொண்டு சென்றதிலிருந்தே காவல்துறையினரின் குற்றச் செயல் உறுதி ஆகிறது. காவல்துறையினரின் இந்த அப்பட்டமான படுகொலைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதில் சம்பந்தப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரை பணி நீக்கம் செய்வதோடு, கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும். காவல்துறையினரின் இதுபோன்ற கொடிய தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில், “காவல் மரணங்களில் இந்தியாவில் தமிழ்நாடு 2 ஆவது இடம் வகிப்பதாக 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய குற்ற ஆவண மைய அறிக்கை ( என்சிஆர்பி) கூறுகிறது. தமிழ்நாட்டில் 2018 ஆம் ஆண்டில் மட்டும் 12 பேர் காவல் நிலையங்களில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். 2020 ஜனவரி வரை அந்தக் கொலை வழக்குகளில் ஒன்றில்கூட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. தமிழக காவல்துறை எந்த அளவுக்கு மக்கள் விரோதமாக நடந்துகொள்கிறது என்பதற்கு இதுவொரு சான்றாக உள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com