கேரள விமான விபத்து - தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

கேரள விமான விபத்து - தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
கேரள விமான விபத்து - தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

174 பயணிகள், 10 குழந்தைகள், 2 விமானிகள், 4 விமான குழுவினருடன் துபாயில் இருந்து கேரளா வந்த ஏர் இந்தியா விமானம், நேற்று இரவு 7.41 மணி அளவில் தரையிறங்கும்போது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. கனமழை பெய்துகொண்டிருந்த நிலையில், மிகுந்த சிரமத்திற்கு இடையே விமான‌த்தை தரையிறக்க விமானி முயற்சித்துள்ளார். அப்போது ஓடுதளத்தில் கட்டுப்பாட்டை இழந்து 35 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததில் விமானம் இரண்டாக உடைந்தது.

3 மணி நேரம் நீடித்த மீட்புப் பணி நள்ளிரவு 12 மணி அளவில் நிறைவடைந்தது. கோழிக்கோடு விமான விபத்தில் விமானிகள் உட்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 120 பேர் காயமடைந்துள்ளனர். 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விமான விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக வந்த செய்தி மிகுந்த வேதனை அளித்தது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா காரணமாக வெளிநாட்டில் சிக்கித் தவித்த இந்தியர்களை வீட்டிற்கு அழைத்து வந்த ஏர் இந்தியா விமான விபத்து அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைவார்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனைகளில் மீண்டு வருபவர்களுக்கு வாழ்த்துகள். கேரளாவில் ஏற்கனவே அதிக வேலை செய்த மருத்துவ நிபுணர்களுக்கு அதிக வலிமை தேவை” எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com