RIP EVKS Elangovan|ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்!
”அக்கறையுடன் நலம் விசாரிப்பார்” - முதலமைச்சர் ஸ்டாலின்
”ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் வேதனையை ஏற்படுத்துகிறது. மகன் இறந்த கவலையை மீறி மக்களுக்காக பணியாற்றியவர் .
கடைசியாக சந்தித்தபோது அவர் பேச முடியாத நிலையில் இருந்தாலும், சொல்ல வந்ததை உணர்ந்தேன். எப்போதும் தன் மனதில் பட்டதைப்பேசிவிடக்கூடிய பண்புக்குச் சொந்தகாரர். பல ஆண்டுகளாக தமிழக அரசியலில், முன்னணித் தலைவராக விளங்கியவர் . என்னை எப்போது சந்திக்க வந்தாலும் அக்கறையுடன் நலம் விசாரிப்பார். திமுக அரசின் திட்டங்களை குறிப்பிட்டு மக்களிடையே உள்ள ஆதரவை தெரிவித்து பாராட்டுபவர்.நீண்ட காலம் மக்கள் பணியாற்றிய இவரது இழப்பால் வாடும் குடும்பத்திற்கு இரங்கல்.”
’தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர்’ - மல்லிகார்ஜுன கார்கே
”முன்னாள் மத்திய அமைச்சரும், PCC யின் முன்னாள் தலைவருமான இளங்கோவன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் .
ஒரு நேர்மையான மற்றும் தைரியமான தலைவர், அவர் ஒருமித்த கருத்தை உருவாக்குபவர். காங்கிரஸ் கட்சி மற்றும் தந்தை பெரியாரின் முற்போக்கு கொள்கைகளை நிலைநிறுத்த அவர் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார். உறுதியான அர்ப்பணிப்புடன் தமிழக மக்களுக்கு சேவை செய்தார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.”
”எனது ஆழ்ந்த இரங்கல்கள்” - கார்த்திக் ப சிதம்பரம்
” ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்கள் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்”
"மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடியவர் " - விசிக தொல்.திருமாவளவன்:
”காங்கிரஸ் பேரியக்கத்தின் சட்டமன்ற உறுப்பினரும் மேனாள் இந்திய ஒன்றிய அமைச்சருமான அண்ணன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் மறைவு பெருந்துயரத்தை அளிக்கிறது. தனிப்பட்ட முறையில் என்மீது மிகுந்த பற்றுதலைக் கொண்டிருந்தவர். அவ்வப்போது தொடர்பு கொண்டு என்னை ஊக்கப்படுத்தியவர். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடியவர்.
அவருடைய மறைவு தமிழக அரசியல் களத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் யாவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
"தமிழ்நாட்டுக்கும் பேரிழப்பாகும்" - விசிக எம்.பி. ரவிக்குமார்
”அண்ணன்ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் மறைவெய்திய செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. #விசிக மீதும் தலைவர் @thirumaofficial அவர்கள் மீதும் அன்பு கொண்டவர். திராவிட இயக்கக் கொள்கைகளையும் தேசியப் பார்வையையும் சேர்த்து வெளிப்படுத்தியவர். சனாதன சக்திகள் தமிழ்நாட்டில் கால் பதிக்கக்கூடாது என்ற உறுதியான நிலைப்பாடு கொண்டவர். அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டுக்கும் பேரிழப்பாகும். அவருக்கு எனது அஞ்சலி”
’இவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது’ - ஜிகே வாசன்!
” மிகுந்த வேதனை அளிக்கிறது” -அதிமுக வைகைச் செல்வன்!
"தந்தை பெரியாரின் வழித்தோன்றல்” - ஐஜேகே பாரிவேந்தர்
“ தந்தை பெரியார் அவர்களின் வழித்தோன்றல் பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தின் வாரிசு அன்பு சகோதரர் திரு EVKS இளங்கோவன் அவர்களின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கும் அவரது குடும்பத்திற்கும் மிகப்பெரிய இழப்பாகும், அவரின் பணி தேசிய அளவில் பாராளுமன்ற உறுப்பினராக, மத்திய அமைச்சராக மற்றும் சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றி மக்களுக்கு தொண்டாற்றியவர்.
அவருடைய இழப்பு அவரது குடும்பத்திற்கும் அவர் சார்ந்த கட்சிக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் என் சார்பாகவும் இந்திய ஜனநாயக கட்சி சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ”
"மறைவை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது" - பாமக ராமதாஸ்
”தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வெ.கி.ச இளங்கோவன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
நீண்ட பாரம்பரியம் கொண்ட அரசியல் குடும்பத்திலிருந்து வந்த ஈ.வெ.கி.ச இளங்கோவன் தமிழகத்தில் மிகவும் நெருக்கடியாக கால கட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பை ஏற்று, அதை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டவர். பாட்டாளி மக்கள் கட்சியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். என் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தவர். தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்க வளாகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை வழிகாட்டிகளாக தந்தைப் பெரியார், அண்ணல் அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் உருவச் சிலைகள் அமைக்கப்பட்ட போது, அவற்றில் தந்தைப் பெரியாரின் சிலையை இளங்கோவன் அவர்களை அழைத்து தான் திறக்கச் செய்தேன்.
தமிழ்நாட்டு அரசியலில் அவர் பயணிக்க வேண்டிய தொலைவும், படைக்க வேண்டிய சாதனைகளும் ஏராளமாக இருந்த நிலையில் அவரது மறைவை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது.
ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், காங்கிரஸ் கட்சினர் உள்ளிட்ட அனைவருக்கும் இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்."
"மிகுந்த மன வேதனை அடைந்தேன்" - தவெக விஜய்!
"மிகப்பெரிய அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவரும், தந்தை பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் ஒன்றிய ஜவுளித்துறை இணை அமைச்சரும், தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
’அவரது மறைவுச் செய்தி மனதை வாட்டுகிறது’ - பாமக அன்புமணி
”தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத பங்களிப்பு செய்த தலைவர்களின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் ஒருவர். சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர், செயல் தலைவர் என ஏற்றுக் கொண்ட பொறுப்புகள் அனைத்தையும் திறம்பட வகித்தவர்.
மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நான் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த போது பல்வேறு துறைகளின் இணை அமைச்சராக பணியாற்றியவர் இளங்கோவன் . என் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர். ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த அவர், நலம் பெற்று வீடு திரும்புவார் என எதிர்பார்த்திருந்த வேளையில் அவரது மறைவுச் செய்தி மனதை வாட்டுகிறது. அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கும், அவரது குடும்பத்திற்கும் பேரிழப்பாகும். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், காங்கிரஸ் கட்சினர் உள்ளிட்ட அனைவருக்கும் இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”
”சிறு வயதிலிருந்தே அரசியல் பணி” - பாஜக. எல். முருகன்
” ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கமிட்டி தலைவருமான, மதிப்பிற்குரிய திரு.ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்கள், உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
சிறு வயதிலிருந்தே அரசியல் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர், முன்னாள் மத்திய அமைச்சராகவும், தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றி வந்தார். இந்த துயரமான சமயத்தில் அவரைப் பிரிந்து வாடும், அவரது குடும்பத்தாருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதோடு, அண்ணாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!"