சோபியா கைதும்.. தலைவர்கள் கண்டனங்களும்..

சோபியா கைதும்.. தலைவர்கள் கண்டனங்களும்..
சோபியா கைதும்.. தலைவர்கள் கண்டனங்களும்..

விமானப் பயணத்தின் போது பாஜக குறித்து தமிழிசையிடம் விமர்சித்த தூத்துக்குடிப் பெண் சோபியா பெலிக்ஸ் கைது செய்யப்பட்டார். சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் தமிழிசை பின்னால் அமர்ந்திருந்த சோபியா என்ற பெண் பாஜகவிற்கு எதிராக முழக்கமிட்டுள்ளார். இது குறித்து தமிழிசை அளித்த புகாரில் பேரில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டார். 15 நாட்கள் நீதிமன்றக்காவலில் அவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தமிழிசை உள்ளிட்ட 10 பேர் மீது சோபியா குடும்பத்தினர் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டதாகக் கூறப்படும் சோபியாவுக்கு எதிராக புகார் அளித்தது தமிழிசை செளந்தரராஜனின் பெருந்தன்மையற்ற, முதிர்ச்சியற்ற செயல் என தெரிவித்துள்ளார். விமானத்தில் பயணிகள் ஒழுங்கீனமாக நடந்துகொண்டால், அதுகுறித்து புகார் அளிக்க வேண்டியது விமான நிறுவனம்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டன ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ள இயக்குநர் பாரதிராஜா, “என் இனி‌ய‌ சகோதரி தமிழிசைக்கு. பொதுவாழ்க்கையில் ஈடுபடும் நீங்கள் பெருந்தன்மையோடு இருக்க வேண்டும். நானும் பல நேரங்களில் பலரின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளேன். நாம் எதிரி என சிலரை நினைப்போம், சிலர் நம்மை எதிரி என நினைப்பார்கள். யாருக்கும் யாரும் எதிரி அல்ல; கருத்து வேறுபாடுகள்தான் காரணம். ஜனநாயக நாட்டில் கருத்து வேறுபாடுகளுக்கு அனுமதி உண்டு. சோபியா பிறந்த மண்ணுக்கும், புகுந்த மண்ணுக்கும் பெருமை சேர்த்தவர். தூத்துக்குடி சம்பவத்தால் மன வேதனையுடன், உரிமையில் பேசியுள்ளார். தைரியம் மிக்க தமிழச்சியாக தமிழிசையிடம் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். சோபியாவை அழைத்து உங்கள் தரப்பு விளக்கம் அளித்திருக்க வேண்டும். கைது செய்து சிறையிலடைக்கும் செயல் அநாகரீகமானது. குமரி அனந்தனின் பெண்ணாக உங்களை நினைக்க முடியவில்லை.சோபியா மீதான வழக்கை திரும்பப் பெறாவிட்டால் வரலாறு உங்களை மன்னிக்காது” என தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பயணம் செய்த விமானத்தில், பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட பெண் கைது செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்த்து முழக்கமிட்ட ஒரே காரணத்தால் கைது செய்யப்படுவதை, கருத்துரிமையின் மீது நடத்தப்படும் தாக்குதலாக கருதுவதாக தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com