வைகோ முதல் கமல்ஹாசன் வரை.. மத்திய பட்ஜெட் குறித்து தமிழக தலைவர்கள் சொல்வதென்ன? - தொகுப்பு

வைகோ முதல் கமல்ஹாசன் வரை.. மத்திய பட்ஜெட் குறித்து தமிழக தலைவர்கள் சொல்வதென்ன? - தொகுப்பு
வைகோ முதல் கமல்ஹாசன் வரை.. மத்திய பட்ஜெட் குறித்து தமிழக தலைவர்கள் சொல்வதென்ன? - தொகுப்பு

மத்திய பட்ஜெட் குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துகளின் தொகுப்பை காணலாம்.

வைகோ-மதிமுக :

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில், 2022-23 ஆம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 முதல் 8.5 விழுக்காடு வரை இருக்கும் என்று, பொருளாதார ஆய்வு அறிக்கை கூறுவதை நிறைவேற்றுவதற்கான சாத்தியகூறுகள் இல்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒட்டுமொத்த வளர்ச்சி (ஜி.டி.பி.) ஒரே நிலையில்தான் இருக்கின்றது. முந்தைய நிதி ஆண்டில் சேவைத் துறை வளர்ச்சி விகிதம் -8.4 விழுக்காடு அளவு படுபாதாளத்தில் இருந்தது. நடப்பு நிதி ஆண்டில் அதனை மீட்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.

இந்தியாவில் தயாரிப்போம் (Make in India) திட்டப்படி, 60 இலட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், கடந்த ஏழாண்டு கால பா.ஜ.க. அரசில் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோய் இருக்கின்றன என்பதுதான் உண்மை.

கடந்த இரண்டு ஆண்டுக் காலத்தில் பெரிதும் வீழ்ச்சியடைந்த உற்பத்தித் தொழில் துறை மீண்டு எழுவதற்கு வழிவகை காணப்படவில்லை. ரூ. 10 இலட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் 80-சி என்ற வரிவிலக்கு உச்ச வரம்பு நீண்டகாலமாகவே ரூ. 1.5 இலட்சம் என்று இருப்பதை மாற்ற வேண்டும். பி.எப்., ஈ.எஸ்.ஐ., என பலவற்றிலும் உச்சவரம்புகள் மாற்றப்பட்டது போல் 80-சி திட்டத்திலும் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

‘ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே வரி, ஒரே கல்வி’ என்பதை நிலைநாட்ட, தொடர்ந்து முயற்சித்து வரும் மோடி அரசு, மாநிலங்கள் மீது ஆதிக்கம் செலுத்தவும் உரிமைகளைப் பறிக்கவும், ‘ஒரே நாடு ஒரே ஆவணப் பதிவு’ திட்டத்தையும் கொண்டு வருகின்றது. நில ஆவணங்களை மின்னணு முறையில் ஆவணப்படுத்தும் முறை ஏற்கனவே மாநிலங்களில் நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றது. நிலச் சீர்திருத்தம் என்ற பெயரில் ‘ஒரு நாடு; ஒரு பதிவு முறை’ என்பதும் மாநில அதிகாரங்களைப் பறிப்பதற்கான முயற்சி ஆகும். இந்த நிதி நிலை அறிக்கையிலும் ஏமாற்றமே மிஞ்சுகின்றது.

முத்தரசன்-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நாட்டு மக்கள் தொகையில் மேல்தட்டில் உள்ள பத்து சதவிதத்தினர் நாட்டின் மொத்த வருமானத்தில் 57 சதவிதத்தை பெற்று வரும் நிலையில் அடித்தட்டில் உள்ள 50 சதவிதத்தினர் (அதாவது 65 கோடி மக்கள்) 8 சதவிதம் மட்டுமே பெறுவதை அண்மையில் சர்வதேச ஆய்வறிக்கை வெளிப்படுத்தியது. சமூக கொந்தளிப்பை உருவாக்கும் இந்த ஏற்றத் தாழ்வை சமப்படுத்துவதற்கான முயற்சியில் நிதிநிலை அறிக்கை ஈடுபடவில்லை. 142 பில்லியனர்களிடம் குவிந்து வரும் செல்வக்குவிப்பை மேலும் பெருக்குவதில் நிதிநிலை அறிக்கை அக்கறைகாட்டுகிறது. அடித்தட்டு உழைக்கும் மக்களை வஞ்சித்து விட்டது.

இயற்கை பேரிடர் காலங்களில் மாநில அரசுகளுக்கு ஆதரவு கரம் நீட்டுவதில் பாகுபாடு காட்டிவரும் ஒன்றிய அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது நம்பிக்கை அளிப்பதாக இல்லை. சமூக உற்பத்தியில் உருவாகும் சொத்துக்களை குவித்து வரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கண்களுக்கு வெண்ணெய் தடவும் நிதிநிலை அறிக்கை, வேலையில்லாமலும் வருமானம் இழந்தும் கதறி அழுதுவரும் ஏழை மக்களின் கண்களில் சுண்ணாம்பு வைத்து தேய்த்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

தினகரன் - அமமுக

காவிரி-பெண்ணாறு இணைப்புத் திட்டம் இறுதி செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

கே.பாலகிருஷ்ணன் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

மத்திய அரசின் பட்ஜெட் நனைந்துபோன பட்டாசு போல இருக்கிறது என மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், 'மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத #Budget2022 இது. பொருளாதார நசிவால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழைமக்களுக்கான திட்டங்கள், வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம், சிறுகுறு நடுத்தர தொழில்கள் மேம்பட உதவி என எதிர்பார்த்த அம்சங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது'' என தெரிவித்துள்ளார்.

மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத #Budget2022 இது. பொருளாதார நசிவால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழைமக்களுக்கான திட்டங்கள், வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம், சிறுகுறு நடுத்தர தொழில்கள் மேம்பட உதவி என எதிர்பார்த்த அம்சங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.

— Kamal Haasan (@ikamalhaasan) February 1, 2022

திருமாவளவன் - விடுதலை சிறுத்தைகள் கட்சி

வருமானவரியில் எந்தவித மாற்றத்தையும் அரசு கொண்டுவரவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com