தொகுதி மறுவரையறை | மாறிய தமிழ்நாட்டின் நிலைப்பாடு.. விஜய் வந்த பின் நடந்த மாற்றம்!
மத்திய அரசு 70-களில் கொண்டுவந்த மக்கள் தொகை கட்டுப்பாடு திட்டங்களை தென் மாநிலங்கள் தீவிரமாக பின்பற்றிய நிலையில், அதனை வட இந்திய மாநிலங்கள் சரிவர பின்பற்றவில்லை. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளில் வட இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது.
இந்த சூழலில் நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்யும் திட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டுவந்தது. ஆனால், தங்களின் தொகுதிகள் குறையும் என தென்மாநிலங்களில் இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் பாஜக கொண்டுவந்த தொகுதி மறுவரையறை மசோதா எதிர்கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டது.
எனினும் தற்போது மீண்டும் அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவர பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சூழலில் தான், தமிழக முதல்வர் விஜய் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் புறக்கணித்தன.
இந்த கூட்டத்தில், தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதே அளவிலேயே நிரந்தரமாக வைக்க வேண்டும் என்றும், அதற்குத் தேவையான மற்றும் உரிய சட்ட திருத்தங்கள் பாராளுமன்றத்தில் கொண்டுவர வேண்டும் என்றும் அனைத்து எம்.பிக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
அதே நேரம் கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தபோது, அந்த கூட்டத்தில், தொகுதி மறுவரையறையை 2026-இல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டித்து, அரசமைப்பு சட்டத்தில் அதற்குரிய சட்டத் திருத்தமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், “1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்பொழுது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ, அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தேவையான அரசியல் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டது.
அதே போல,தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் ஒன்றிய அரசு மாற்றம் செய்யக் கூடாது என்றும் அந்த கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. அதாவது திமுக ஆட்சியில் நியாயமான தொகுதி மறுவரையறை என்ற தமிழ்நாடு அரசின் கொள்கை தற்போது தொகுதி மறுவரையறை வேண்டாம் என்று மாறியுள்ளதாக பார்க்கப்படுகிறது.
அரசின் கொள்கை மாறினாலும் திமுக கடந்த ஆண்டு, தான் முன்னெடுத்த நியாயமான தொகுதி மறுவரையறை என்ற கொள்கையில் உறுதியாக இருப்பதை திமுக எம்.பி கனிமொழி இரு நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. அதே நேரம் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழக காங்கிரஸ், விசிக, IUML ஆகிய கட்சிகள் திமுகவின் நியயமான தொகுதிமறுவரையறை என்ற கொள்கையில் இருந்து தற்போது தொகுதி மறுவரையறை வேண்டாம் என்ற கொள்கைக்கு மாறியுள்ளது.
மேலும் கடந்த ஆண்டு திமுக அரசு கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் தவெக சார்பில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் நியாயமான தொகுதிமறுவரையறை என்ற தீர்மானத்தை ஆதரித்திருந்தார். இந்த சூழலில் தற்போது தவெக அரசும் தொகுதி மறுவரையறை வேண்டாம் என்று தனது கொள்கையை மாற்றியுள்ளது.
அதே போல கடந்த ஆண்டு தொகுதி மறுவரையறை தொடர்பாக தவெக வெளியிட்ட அறிக்கையில், நாடாளுமன்ற / சட்டமன்ற உறுப்பினர்கள் பற்றாக்குறை ஒரு மக்கள் பிரச்சினை இல்லை என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது முதல்வர் விஜய் தலைமையில் இந்த விவகாரம் முக்கிய பிரச்சினையாக கருதி இது குறித்து விவாதிக்க எம்.பிக்கள் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

