தமிழ்நாடு
கிருஷ்ணகிரியில் கொரோனா நோய்த் தொற்றால் காவலர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரியில் கொரோனா நோய்த் தொற்றால் காவலர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளருக்கு ஓட்டுனராக இருந்த காவலர், கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி கேஆர்பி அணை காவல் நிலையத்தில் சிலம்பரசன் (32) என்பவர் காவலராக பணிபுரிந்து வந்தார். இவர் கிருஷ்ணகிரி காவல் துணை கண்காணிப்பாளருக்கு ஓட்டுனராக பணியில் இருந்தார். இந்நிலையில் கடந்த 24-ம் தேதி இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் உடல்நிலை மோசமடைந்ததால், அங்கிருந்து கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிலம்பரசன் இன்று அதிகாலை உயிரிழந்தார்.