பைக் ஓட்டியவருக்கு சீட் பெல்ட் அணியவில்லை என அபராதம்
தஞ்சாவூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தவர் சீட் பெல்ட் அணியவில்லை எனக் கூறி போலீசார் அபராதம் விதித்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிகாடைச் சேர்ந்தவர் பாண்டியராஜ். தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் புறவழிச்சாலை அருகே உள்ள கூட்டுறவு வங்கிக்குப் பணம் செலுத்துவதற்காக மோட்டார் சைக்கிளில் கடந்த 21-ம் தேதி சென்றுள்ளார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய போலீசார், அவரிடம் ஆவணங்களை கேட்டனர். ஹெல்மெட் அணிந்து, உரிய ஆவணங்களையும் பாண்டியராஜ் காட்டிய நிலையில் தாலுகா போலீசார், சீட் பெல்ட் அணியாத காரணத்தால் 500 ரூபாய் அபராதம் செலுத்துமாறு கூறியுள்ளனர்.
அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி மிரட்டி பணம் பறித்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாண்டியராஜ் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்துள்ளார். மனுவை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், இதுதொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குப் பரிந்துரை செய்தார்.