‘கெத்து’ காட்ட சைலன்சர்களை மாற்றிய இளைஞர்கள்: போலீஸ் அதிரடி
போரூரில் அதிக சத்தம் எழுப்பியபடி சென்ற 20 மோட்டார் சைக்கிள்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் இயக்கப்படும் பெரும்பாலான மோட்டார் சைக்கிள்களில் அதிக சத்தம் வர வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் ஒரிஜினல் சைலன்சர்களை கழற்றி விட்டு அதிக சத்தம் கொடுக்கும் புதிய சைலன்சர்களை மாட்டிக்கொண்டு வலம் வருகின்றனர். இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைக்கின்றனர். இதனால் விபத்துகளும் அதிகளவில் நடைபெற்று வந்த நிலையில் அதுபோன்ற வாகனங்களை ஆய்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக போக்குவரத்து கூடுதல் கமிஷ்னர் அருண் அறிவுறுத்தலின் பேரில், சென்னை மேற்கு மாவட்ட போக்குவரத்து துனை கமிஷ்னர் சிவகுமார் மேற்பார்வையில் போக்குவரத்து போலீசார் தாம்பரம் - மதுரவாயல் செல்லும் பைபாஸ், போரூர் சுங்கச்சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அதிக சத்தம் எழுப்பியபடி வந்த 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து ஒரு வாகனத்திற்கு தலா ரூ.2600 அபராதம் விதித்தனர்.
மேலும் அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களை அகற்றி விட்டு சத்தம் குறைவாக வரும் பழைய சைலன்சரை மாட்டிக்கொண்டு வந்த பிறகுதான் மோட்டார் சைக்கிளை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். மேலும் இதுபோல் சத்தம் அதிகமாக எழுப்பும் சைலன்சர்களை மாட்டக்கூடாது என்றும் மாட்டினால் அது சம்பந்தப்பட்ட மெக்கானிக்குகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து சிக்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.