பணியின்போது காவலர்கள் செல்போன் பயன்படுத்தினால் இடைநீக்கம்?
தமிழகம் முழுவதும் ஆண், பெண், திருநங்கைகள் என ஏராளமான காவலர்கள் நாள்தோறும் காவல் பணியில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு பண்டிகை காலங்களில்கூட விடுமுறை கிடைப்பதில்லை என்ற புகார் உள்ள நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் செல்போன்கள் பயன்படுத்த ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டது.
இதற்கான சுற்றறிக்கை அந்தந்த காவல்நிலையங்களுக்கு முன்பே அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறி காவலர்கள் பலர் பணியின்போது செல்போன் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. அதனைக் கண்டறிந்த அதிகாரிகள், பணியின்போது செல்போன் பயன்படுத்திய காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை தமிழகம் முழுவதும் மொத்தம் 33 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த நடவடிக்கை தொடரும் என்றும் அனைத்து மாநகர ஆணையர்களும், மாவட்ட கண்காணிப்பாளர்களும் இந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று டி.ஜி.பி. ராஜேந்திரன் அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட காவலர்களை இடைநீக்கம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக டி.ஜி.பி. அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.