“செல்போன் மூலம் காவலர் மிரட்டுகிறார்” - கோவை எஸ்.பியிடம் பெண் புகார் - உடனடி நடவடிக்கை!

“செல்போன் மூலம் காவலர் மிரட்டுகிறார்” - கோவை எஸ்.பியிடம் பெண் புகார் - உடனடி நடவடிக்கை!
“செல்போன் மூலம் காவலர் மிரட்டுகிறார்” - கோவை எஸ்.பியிடம் பெண் புகார் - உடனடி நடவடிக்கை!

கோவையில் செல்போன் மூலம் மிரட்டுவதாக மாவட்ட எஸ்.பி.யிடம் பெண் புகார் அளித்த நிலையில், காவலர் மூர்த்தி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

கோவை மாவட்டம் காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மேனகா. இவரது கணவர் மதன்குமார். இவருக்கு 2017ஆம் ஆண்டு திருமணமான நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். விவாகரத்திற்கும் முயற்சி செய்து வருகின்றனர். மேனகா சில தினங்களாக தனது தாத்தா, பாட்டியுடன் இணைந்து வசித்துவரும் நிலையில் மதன்குமார் தினமும் குடித்துவிட்டு வந்து தன்னை துன்புறுத்துவதாக மார்ச் 18ஆம் தேதி கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் இருந்து தொலைபேசியில் மேனகாவை தொடர்புகொண்ட காவலர் மூர்த்தி என்பவர், மதன்குமார் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாகவும், அவர் உயிரிழந்துவிட்டால் நீங்கள்தான் பொறுப்பு எனவும் மிரட்டியதாகக் கூறியிருக்கிறார். மேலும் மருத்துவமனை சென்று பார்க்கும்படி மேனகா மற்றும் அவரது சித்தியிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய மேனகாவும் அரசு மருத்துவமனைக்குச் சென்று பார்த்திருக்கிறார். மேலும் மருத்துவமனையில் விசாரித்தபோது அப்படி ஒருவரும் அனுமதிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்திருக்கிறது. மீண்டும் அடுத்தநாள் கோவில்பாளையம் காவல்நிலைய தலைமை காவலர் மூர்த்தி, மேனகாவை அழைத்து கணவரை சென்று பார்த்தீர்களா என கேட்டபோது அப்படி ஒருவர் அங்கு அனுமதிக்கப்படவில்லை என மருத்துவமனையினர் கூறுவதாக தெரிவித்துள்ளார்.

அதற்கு அந்த காவலர் மதன்குமார் காணாமல் போய்விட்டதாகவும், அவரை தாங்கள் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த மேனகா எதற்காக பொய் தகவல் அளித்தீர்கள் என கேட்டதுடன், இவ்வாறு செய்தால் தானும் தற்கொலை செய்து கொள்வேன் எனவும், அதற்கு நீங்கள்தான் காரணம் எனக் கூறிவிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். பின்னர் இதுகுறித்து வழக்கறிஞர் மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் மனுவும் அனுப்பியுள்ளார். மனுவில் காவலர் தன்னையும் தனது உறவினரையும் மிரட்டும் தொனியில் பேசியதாகவும், தவறான தகவல்களை கொடுத்து மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் காவலர் மற்றும் மேனகா பேசிய செல்போன் ஆடியோ வெளியான நிலையில், புகாரை தொடர்ந்து காவலர் மூர்த்தியை ஆயுதப்படைக்கு மாற்றி காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com