போலி 'நீட்' மதிப்பெண் சான்றிதழ்: தந்தை, மகளை கைது செய்ய காவல்துறை தீவிரம்!
போலி 'நீட்' மதிப்பெண் சான்றிதழ் சமர்ப்பித்த விவகாரத்தில் மாணவியையும், அவரது தந்தையையும் கைது செய்ய காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது.
நீட் தேர்வு தொடர்பாக இன்னும் ஒரு மோசடி வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 7-ஆம் தேதி நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வின்போது ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த மாணவி தீக்சா போலியான நீட் மதிப்பெண் சான்றிதழை அளித்தது தெரியவந்தது.
இதையடுத்து, மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர் செல்வராஜன் சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக மாணவி தீக்சா மீதும், அவரது தந்தையும் பல் மருத்துவருமான பாலச்சந்திரன் மீதும் 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக ஆஜராக தந்தைக்கும் மகளுக்கும் கடந்த 15-ஆம் தேதி சென்னை பெரியமேடு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால், அவர்கள் ஆஜராகவில்லை.
இந்நிலையில், 2-ஆவது முறையாக சம்மன் அனுப்பியும் அவர்கள் ஆஜர் ஆகாததுடன் பதிலும் அளிக்கவில்லை. இதனால் பல் மருத்துவர் பாலச்சந்திரனையும் அவரது மகள் தீக்சாவையும் கைது செய்ய பெரியமேடு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
முன்னதாக, மருத்துவர் பாலச்சந்திரன் சொந்த ஊரான பரமக்குடியில் விசாரித்தபோது, தலைமறைவாகி இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தனிப்படை அமைத்து 2 பேரையும் கைது செய்ய பெரியமேடு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ஏற்கெனவே நீட் ஆள்மாறட்ட மோசடி விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், இந்த வழக்கும் சிபிசிஐடிக்கு மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.