கோவையில் காதல் ஜோடியிடம் பணம் பறித்த காவலர் சஸ்பெண்ட்
பொய் வழக்குப் போட்டு விடுவதாக மிரட்டி காதல் ஜோடியிடம் 10 ஆயிரம் ரூபாய் பணம் பறித்த, தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்த காதலர்கள், 2 காவலர்கள் மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தனர். பெரியநாயக்கன்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட மேட்டுப்பாளையம் சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். அப்போது ரோந்துப் பணியில் இருந்த தலைமைக் காவலர் சுரேஷ், காவலர் பழனிசாமி ஆகியோர், தங்கள் மீது பொய் வழக்கு போடப் போவதாக மிரட்டியதாக கூறியுள்ளனர். தங்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்க 10 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக பெற்றுக் கொண்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக உயரதிகாரிகள் நடத்திய விசாரணையில், காவலர்கள் இருவரும் பணம் பறித்தது உறுதியானது. இதையடுத்து தலைமைக் காவலர் சுரேஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், காவலர் பழனிசாமி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.