கழிவறையில் காவலர் தற்கொலை.. அழுத்தம் கொடுத்தனரா அதிகாரிகள்..?
சென்னை நீலாங்கரையில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணிச்சுமையும், உயரதிகாரிகளின் நெருக்கடியுமே காவலரின் தற்கொலைக்குக் காரணம் என உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்தவர் காவலர் பாலமுருகன். 2013-ஆம் ஆண்டு இளைஞர் காவல்படையில் சேர்ந்த அவர், ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்தார். அதன்பின் 2016-ஆம் ஆண்டு காவலராக நியமிக்கப்பட்டு, சென்னை அசோக்நகர் காவலர் பயிற்சி மையத்தில் 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். கடந்த 4 நாட்களாக விடுப்பில் இருந்த பாலமுருகன் நேற்று பணிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். கழிவறை சென்ற அவர் வெகு நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள், கழிவறையின் கதவை உடைத்துப் பார்த்தபோது பாலமுருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதனிடையே பணிச்சுமையும், உயரதிகாரிகளின் நெருக்கடியுமே பாலமுருகனின் தற்கொலைக்கு காரணம் என உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவில் பாலமுருகனுக்கு தனிப்பட்ட பிரச்னைகள் ஏதுமில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய நிலையில், பாலமுருகன் தற்கொலை செய்து கொண்டது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவர்கள் கூறுகின்றனர். அதனால், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென எனவும் வலியுறுத்துகின்றனர்.
காவலரின் தற்கொலை குறித்து வழக்கு பதிந்துள்ள நீலாங்கரை காவல்துறையினர், பாலமுருகனின் உறவினர்கள், நண்பர்கள் மற்றம் சக காவலர்களிடம் விவரங்களைச் சேகரித்து வருகின்றனர்.