ஆதிதிராவிடருக்கு தலைவர் பதவி - மலைகிராம மக்கள் போராட்டத்தால் காவல்துறையினர் பேச்சுவார்த்தை
திருப்பத்தூரில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை மலைக்கிராம மக்கள் புறக்கணித்து வரும் நிலையில் அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் கொடி அணிவகுப்பு நடத்தியும் சமாதானத்தை நோக்கி செயல்பட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதனுர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாயக்கனேரி மலைகிராம ஊராட்சியில், ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஆதிதிராவிடர் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டதால், தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே கிராம மக்களின் எதிர்ப்பை மீறி ஆதிதிராவிட பெண் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதனால் கடும் அதிருப்தியடைந்துள்ள கிராமத்தினர் 9 ஊராட்சி வார்டு உறுப்பினர் இடங்களுக்கும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் வேட்புமனு தாக்கல் செய்யாமல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, வரும் 9ஆம் தேதி தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என கிராம முக்கிய நிர்வாகிகளிடம் திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் சுப்புராஜீ மற்றும் ஆம்பூர் துணை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு வாக்களிக்க செல்பவர்களை தடுக்க மாட்டோம் என கிராம நிர்வாகிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து, மலை கிராமத்தில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.