தொழிலதிபரை கடத்தி ரூ.70 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் - 6 மணிநேரத்தில் மடக்கிய போலீசார்

தொழிலதிபரை கடத்தி ரூ.70 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் - 6 மணிநேரத்தில் மடக்கிய போலீசார்
தொழிலதிபரை கடத்தி ரூ.70 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் - 6 மணிநேரத்தில் மடக்கிய போலீசார்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த தொழிலதிபரை கடத்தி 70 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய கும்பலை புதுக்கோட்டை போலீசார் 6 மணி நேரத்தில் கைது செய்து கடத்தப்பட்ட தொழிலதிபரையும் மீட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் வடக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன்(67). இவர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் ஒப்பந்ததாரராகவும் அப்பகுதியில் தொழிலதிபராகவும் உள்ளார். இன்று காலை 5 மணிக்கு இவர் வழக்கம்போல் கீரனூரில் இருந்து கிள்ளுக்கோட்டை சாலையில் நடை பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது ஒரு பொலிரோ காரில் வந்த ஐந்து மர்மநபர்கள் அவரை காரில் கடத்தியுள்ளனர். இதனிடையே நடைபயிற்சிக்குச் சென்ற தனது தந்தை வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது மகன் மணிகண்டன் தந்தையை காணவில்லை என கீரனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதன்பின் காலை 11.45 மணிக்கு மணிகண்டனின் செல்போன் எண்ணிற்கு அழைத்த மர்மநபர்கள் அவரது தந்தை சந்திரசேகரனை கடத்தி வைத்திருப்பதாகவும், 70 லட்ச ரூபாய் பணத்தை தயார் செய்துவிட்டு அழைக்குமாறும் கூறிவிட்டு அலைபேசி இணைப்பை துண்டித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் அவர்கள் பணம் கேட்டு மிரட்டுவது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து புதுக்கோட்டை எஸ்பி நிஷா பார்த்திபன் உத்தரவின் பெயரில் தனிப்படை போலீசார் மற்றும் மாத்தூர் கீரனூர் திருக்கோகர்ணம் கந்திரகோட்டை ஆகிய காவல் நிலையங்களைச் சேர்ந்த இரண்டு காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், மூன்று ஆய்வாளர்கள் உள்ளிட்ட தனிப்படை போலீசார் மர்ம நபர்களின் செல்போன் எண்களை கண்காணித்து அதன் அடிப்படையில் அவர்களை விரட்டிப் பிடிக்க முயன்றுள்ளனர்.

போலீசார் வருவதை அறிந்த அவர்கள் கடத்தப்பட்ட சந்திரசேகரனை காரில் வைத்துக்கொண்டு புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, வல்லம், தஞ்சாவூர், செங்கிப்பட்டி, திருவரம்பூர், சூரியூர் என புதுக்கோட்டை - தஞ்சை - திருச்சி ஆகிய மூன்று மாவட்டங்களில் காரிலேயே சுற்றி திரிந்து உள்ளனர். போலீசாரும் தனித்தனி குழுக்களாக பிரிந்து கடத்தல் கும்பலை விரட்டிப் பிடிக்க முயன்றபோது மாலை 5 மணி அளவில் போலீசார் தங்களை விரட்டுவதை அறிந்த மர்ம நர்கள் கடத்தி வைத்திருந்த தொழிலதிபர் சந்திரசேகரனை திருச்சி மாவட்டம் சூரியூர் சாலையில் இறக்கிவிட்டு தப்பி ஓடி உள்ளனர்.

இதன்பின் தான் சூரியூரில் இருப்பது குறித்து அவரது மகன் மணிகண்டனுக்கு சந்திரசேகரன் தகவல் தெரிவித்துள்ளார். போலீசாரின் உதவியோடு தந்தை சந்திரசேகரனை மணிகண்டன் சூரியூர் சென்று காவல் நிலையம் அழைத்து வந்தார். இதனிடையே கடத்தல்காரர்களின் செல்போனை வைத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து தற்போது கீரனூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொழிலதிபரை கடத்திய சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேரும் கீரனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பணத்திற்காக மட்டும்தான் தொழிலதிபரை கடத்தினார்களா அல்லது வேறு ஏதும் காரணத்திற்காக தொழிலதிபரை அந்த ஐந்து மர்ம நபர்களும் கடத்தினார்களா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் மேற்கொண்ட அடுத்தகட்ட விசாரணையில் கிராம நிர்வாக அலுவலருக்கும் தொழிலதிபர் சந்திரசேகரனுக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வீட்டில் வாடகைக்கு இருந்ததில் முன் விரோதம் இருந்ததாகவும், அதன் அடிப்படையில் தொழிலதிபர் கடத்தப்பட்டு இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்த தொழிலதிபரை 70 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய கும்பலை 6 மணி நேரத்தில் போலீசார் மீட்டதோடு கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளையும் விரைந்து கைது செய்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com