வழியில் ஏற்பட்ட நெஞ்சுவலி - காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த ஓட்டுநரை காப்பாற்றிய போலீசார்

வழியில் ஏற்பட்ட நெஞ்சுவலி - காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த ஓட்டுநரை காப்பாற்றிய போலீசார்
வழியில் ஏற்பட்ட நெஞ்சுவலி - காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த ஓட்டுநரை காப்பாற்றிய போலீசார்

நெஞ்சு வலி காரணமாக காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த ஆட்டோ ஓட்டுனரின் உயிரை அடையாறு போக்குவரத்து காவல்துறையினர் காப்பாற்றியுள்ளனர்.

சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (53). கடந்த 25 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் கொடுங்கையூரில் இருந்து திருவான்மியூருக்கு பயணியை ஏற்றிச்சென்று அவரது வீட்டில் விட்டுள்ளார். அப்போதே அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சமாளித்து விடலாம் என நினைத்து திருவான்மியூரில் இருந்து ஆட்டோவை எடுத்துக்கொண்டு புறப்பட்டிருக்கிறார்.

ஆனால் ஒரு கட்டத்தில் நெஞ்சு வலி தாங்க முடியாமல் போகவே, இதுபோன்ற ஆபத்தான நேரத்தில் யாரிடம் உதவி கேட்பது என தவித்த சுரேஷ்குமார் வரும் வழியில் அடையாறு போக்குவரத்து காவல்நிலையத்தை பார்த்ததும் ஆட்டோவை நிறுத்திவிட்டு, நேரடியாக போக்குவரத்து காவல் நிலையத்திற்குள் சென்று தனக்கு வலி தாங்க முடியவில்லை என்றும் தன்னை காப்பாற்றுமாறும் கூறிவிட்டு படுத்துவிட்டார்.

இதனையடுத்து காவல்நிலையத்தில் அப்போது பணியில் இருந்த போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் மதி, தலைமைக் காவலர்கள் ஆல்பர்ட் செல்வராஜ், திருமலைக் குமார் மற்றும் காவலர் ஆனந்த குமார் ஆகியோர் உடனடியாக அந்த வழியாக வந்த 108 ஆம்புலன்சை நிறுத்தி சுரேஷ்குமாரை ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அடையாறு போக்குவரத்து காவல்நிலையத்தில் இருந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு செல்கிற அனைத்து சாலைகளையும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். அதேபோல அனைத்து சிக்னல்களும் பச்சை விளக்கு எரியும்படி சமயோகிதமாக போக்குவரத்து போலீசார் மைக் மூலமாக தகவல் கொடுத்தனர்.

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு இருக்கிறதை உறுதிசெய்தார். சரியான நேரத்தில் போக்குவரத்து போலீசார் செய்த உதவியின் காரணமாகவே ஆட்டோ டிரைவர் சுரேஷ் குமார் காப்பாற்றப்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பாக சுரேஷ்குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அதன்பின்பு இரண்டாவது முறையாக தற்போது நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உயிருக்கு போராடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த ஆட்டோ டிரைவரை சமயோசிதமாக காப்பாற்றிய அடையாறு போக்குவரத்துக் போலீசாரை காவல் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com