அன்புச்செழியன் அலுவலகத்தில் போலீஸ் அதிரடி சோதனை
சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் அலுவலகத்தில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகர் சசிகுமாரின் உறவினர் மற்றும் அவரது நிறுவனத்தில் இணை தயாரிப்பாளராக பணியாற்றி வந்த அசோக்குமார் கடந்த சில தினங்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தற்கொலை தொடர்பாக அசோக்குமார் எழுதி வைத்த கடிதம் சிக்கியது. அதில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தான் தற்கொலைக்கு காரணம் என எழுதி வைத்திருந்தார். இதுதொடர்பாக சசிகுமார் அளித்த புகாரின் அடிப்படையில், தற்கொலைக்கு தூண்டியதாக அன்புச்செழியன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே காவல்துறையினர் தேடுவதை அறிந்த அன்புச்செழியன் தலைமறைவாகி விட்டார். இருப்பினும் அவரை பிடிப்பதற்காக 3 தனிப்படை அமைத்துள்ள போலீசார், அன்புச்செழியன் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதை தடுப்பதற்காக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். மேலும் அன்புச்செழியன் பதுங்கி இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்காக அவரின் நண்பரான முத்துக்குமாரை பிடித்து விசாரித்து வரும் போலீசார், இன்று சென்னை தி.நகரில் உள்ள அன்புச்செழியன் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கந்துவட்டி தொடர்பான ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.