உஷாவிற்காக போராடிய பொதுமக்கள் மீது தடியடி: பலர் படுகாயம் #JusticeForUsha
திருச்சியில் காவல் ஆய்வாளர் எட்டி உதைத்தில் உயிரிழந்த உஷாவின் மரணத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் சூளமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. தனது மனைவி உஷாவுடன் திருச்சியில் உள்ள நண்பரின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று சென்றிருக்கிறார். துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தை மறித்துள்ளனர். வாகனச் சோதனையின் போது நிற்காமல் சென்ற இருசக்கர வாகனத்தைத் துரத்தி சென்ற காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்திருக்கிறார். இதில் நிலைத்தடுமாறி உஷா மற்றும் அவரது கணவர் ராஜா ஆகியோர் இருசக்கர வாகனத்துடன் கிழே விழுந்தனர். அப்போது தலையில் பலத்தக் காயமடைந்த உஷா நிகழ்விடத்திலேயே, கணவர் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.
காவல் ஆய்வாளரால் உஷா மரணமடைந்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மறியல் தொடர்ந்த நிலையில் காவல்துறையினர் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இதில் பலர் காயமடைந்தனர். கல்வீச்சியில் ஈடுபட்டதாக 23 பேர் கைதும் செய்யப்பட்டனர்.
இதனிடையே இளம்பெண் உயிரிழக்கக் காரணமான போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் காமராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை திருச்சி மத்திய மண்டல ஐஜி பிறப்பித்துள்ளார்.