போலி பயிற்சியாளர் ஆறுமுகம் அளித்த பகீர் வாக்குமூலம்

போலி பயிற்சியாளர் ஆறுமுகம் அளித்த பகீர் வாக்குமூலம்
போலி பயிற்சியாளர் ஆறுமுகம் அளித்த பகீர் வாக்குமூலம்

மத்திய அரசு ஊழியர் என நம்பவைக்கப்பட்டதால் கல்லூரிகளில் பேரிடர் குறித்து பயிற்சி அளித்ததாக பேரிடர் போலி பயிற்சியாளர் ஆறுமுகம் காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளார்.

கோவையில் தனியார் கல்லூரியில் பேரிடர் பயிற்சியின் போது மாணவி லோகேஸ்வரி இரண்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இதில் பயிற்சியாளராக செயல்பட்ட ஆறுமுகம் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நெல்லையில் இருந்து வேலை தேடி சென்னை வந்தபோது ரஞ்சித் என்பவர் அறிமுகமாகி, அவரது அறக்கட்டளை மூலம் ஆன்லைன் வழியாக தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி வகுப்பில் சேர்ந்ததாக கூறியுள்ளார். பின்னர் ஆறு ஆண்டுகள் கல்லூரிகளில் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்க வைத்து, மத்திய அரசு ஊழியராக நியமனம் செய்யப்பட்டதாக ரஞ்சித் கூறியதாக ஆறுமுகம் குறிப்பிட்டுள்ளார்.

 மத்திய அரசு ஊழியர் என்று கூறிக்கொண்டு பள்ளி, கல்லூரிகளில் பயிற்சி அளித்து வந்ததாகவும் ஆறுமுகம் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். பயிற்சி அளிக்க விரும்பும் பள்ளி, கல்லூரிகளுக்கு ரஞ்சித் அளிக்கும் கடிதத்துடன் சென்று, அங்கு பேரிடர் மேலாண்மை தொடர்பாக மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதாகவும், அதன்பின்னர் விருப்பமுள்ள மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்ததாகவும் ஆறுமுகம் விசாரணையில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு மாணவர்களிடம் 50 ரூபாய் வசூல் செய்யப்பட்டு தான் கையொப்பமிட்ட சான்றிதழ் வழங்கப்படும் எனவும் ஆறுமுகம் கூறியுள்ளார். 

இந்த தொகை முழுவதையும் ரஞ்சித்திடம் வழங்கி விடுவதாகவும், தனக்கு மாத ஊதியமாக 15 ஆயிரத்து 600 ரூபாயும், ஒரு கல்லூரியில் பயிற்சி முடித்தால் 12 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். தன்னை மத்திய அரசு ஊழியர் என நம்பவைத்து அதன்படி இதுவரை ஆயிரத்து 467 கல்லூரிகளில் பயிற்சி அளித்துள்ளதாகவும் காவல்துறை விசாரணையில் ஆறுமுகம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆறுமுகம் அளித்த இந்த தகவல் அடிப்படையில் அவரை வழிநடத்தியதாக கூறப்படும் ரஞ்சித் மற்றும் அவரது அறக்கட்டளை குறித்த விசாரணையை முடுக்கியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com