திருப்பத்தூர்: புளியந்தோப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் உடல் மீட்பு
திருப்பத்தூர் அருகே புளியந்தோப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் சடலம் மீட்கப்பட்டது. கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் குரும்பேரி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளிங்கிரி(45). இவர் கூலித்தொழில் செய்துவருகிறார். இவருடைய மகன் நல்லரசு. பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று இரவு சுமார் 8,30 மணியளவில் வீட்டைவிட்டு வெளியேறி அருகே உள்ள புளியந்தோப்பில் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்ட விழாவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது மழையின் காரணமாக நண்பர்கள் அனைவரும் வீடு திரும்பியுள்ளனர். ஆனால் நல்லரசு மட்டும் அங்கேயே அமர்ந்து தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார் என நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை நல்லரசு உடல் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருப்பதை அவ்வழியாகச் சென்ற அக்கம் பக்கத்தினர் கண்டவுடன், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பிறகு காவல் துணை கண்காணிப்பாளர் சாந்தலிங்கம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். நல்லரசு உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகப்பட்ட போலீசார் கொலையா அல்லது தற்கொலையா என்ற எண்ணத்தில் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.