ஒரே வீட்டில் தங்கிய 25 வடமாநிலத்தவர்கள் : போலீசார் விசாரணை
ஒரே வீட்டில் ஒன்றாக தங்கியிருந்த 25 வடமாநிலத்தவர்களிடம் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் சேண்பாக்கம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில், நேற்று மாலை லாரி மூலம் வந்த 20-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வேலூர் சுகாதார துறையினர் மற்றும் காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 20க்கும் மேற்பட்டோர் தங்கியிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் தமிழகம் முழுவதும் பெட்சீட், தலையனை விற்பவர்கள் என்பது தெரியவந்தது. மேலும், கடந்த சில நாட்களாக ரயில்கள் இயக்கப்படாததால் மதுரை, மயிலாடுதுறை போன்ற பகுதியில் தங்கி இருந்தவர்கள் ரயில் இல்லாமல் காட்பாடி ரயில் நிலையத்தில் தவித்துள்ளனர். பின்னர் தங்கள் குழுவை சேர்ந்தவர்கள் வேலூர் சேண்பாக்கத்தில் இருப்பது தெரியவந்து அவர்களிடம் வந்து அடைக்கலம் அடைந்துள்ளனர். இதனையடுத்து அவர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.