மீண்டும் பெண் சிசுக் கொலையா?: திடீரென குழந்தை உயிரிழந்ததால் பெற்றோர் மீது சந்தேகம்
கரூர் அருகே பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறிய பெற்றோர் மீது அக்கிராம மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். பெண் சிசுக்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ளது போத்தராவுத்தன்பட்டி கிராமம். அக்கிராமத்தில் வசித்து வரும் சிவசிங்கப்பெருமாள் - சங்கீதா தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த 10ம் தேதி அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்த நிலையில், 13ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில், குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி மருத்துவமனை செல்வதாக சிவசிங்கப்பெருமாள் - சங்கீதா தம்பதி குழந்தையுடன் சென்றுள்ளனர். மருத்துவமனை செல்லும் வழியில் குழந்தை இறந்துவிட்டதாகவும் குழந்தையின் உடலை வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்தில் புதைத்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் இறப்பில் சந்தேகம் அடைந்த அக்கிராமத்தைச் சேர்ந்த சிலர் கிராம நிர்வாக அலுவலரிடம் ரகசிய தகவல் அளித்துள்ளனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர், தோகைமலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் உடலை உடற்கூறு பரிசோதனை செய்து விவரங்கள் வெளியான பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.