விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த காவல் ஆய்வாளர் - குவியும் பாராட்டு
நத்தம் அருகே விபத்தில் சிக்கியவர்களை தனது வாகனத்தில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை பகுதியில் நத்தம் காவல் ஆய்வாளர் ராஜமுரளி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது துவரங்குறிச்சி கிடாரிப்பட்டியை சேர்ந்த ஜெயராமன், சிவராமன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் மங்களாம்பட்டி அருகே வரும்போது பனைமரத்தில் மோதி விபத்தில் சிக்கி ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக கிடந்தனர்.
அப்போது அங்கு வந்த நத்தம் காவல் ஆய்வாளர் ராஜமுரளி உடனடியாக அவர்களை தனது போலீஸ் ஜீப்பில் ஏற்றி செந்துறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தார். கடும் பணிச்சுமைகளுக்கிடையே காயமடைந்தவர்களை தனது காவல் வாகனத்தில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்த காவல் ஆய்வாளருக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.