ஆவடி: பட்டாபிராம் அருகே இரட்டை கொலை எதிரொலி.. சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் பணியிடை நீக்கம்!
ஆவடி காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட பட்டாபிராம் ஆயல்சேரி பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ரெட்டைமலை சீனிவாசன், ஸ்டாலின் ஆகியோர் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து குற்றத்தை தடுக்க தவறியதாக பட்டாபிராம் காவல் ஆய்வாளர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்து ஆவடி காவல் ஆணையர் சங்கர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் ஜெகநாதன் தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு பதில் பட்டாபிராம் காவல் ஆய்வாளராக திருவேற்காடு காவல் ஆய்வாளர் விஜய கிருஷ்ணராஜ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சோழவரம் காவல் ஆய்வாளர் திருவேற்காடு காவல் நிலையத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
எதனால் ஒழுங்கு நடவடிக்கை?
ஆவடி காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கைது செய்யவும், சிறையில் அடைக்கவும் காவல் ஆணையாளர் சங்கர் காவல் ஆய்வாளர்களுக்கு உத்தரவு அளித்துள்ளார்.
அதனை பின்பற்றாததால் பட்டாபிராம் காவல் ஆய்வாளருக்கு உட்பட்ட காவல் எல்லையில் இரட்டை கொலை நடந்துள்ளது. இதன் காரணமாக பட்டாபிராம் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் காவலர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டம் ஒழுங்கு குறித்து எச்சரிக்கை..
சட்டம் ஒழுங்கு சம்பந்தமான பிரச்னை விவாகரத்தில் கவன குறைவாக இருந்தால், இனி இதுபோன்று கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் எச்சரித்துள்ளார்.
இதனிடையே போலீஸார் கொலை தொடர்பாக சந்தேகப்படும் நபர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சிலரை காவல் நிலையம் அழைத்து வந்தும் விசாரித்து வருகின்றனர். விரைவில் குற்றவாளிகளை பிடிக்க தேவையான நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.