புரட்டி போட்ட கஜாபுயலால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் - சாலையில் சுற்றித்திரிந்தவருக்கு உதவிய போலீஸ் 

புரட்டி போட்ட கஜாபுயலால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் - சாலையில் சுற்றித்திரிந்தவருக்கு உதவிய போலீஸ் 
புரட்டி போட்ட கஜாபுயலால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் - சாலையில் சுற்றித்திரிந்தவருக்கு உதவிய போலீஸ் 

கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பால் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றித்திரிந்த பெண்ணை காவல் ஆய்வாளர் ஒருவர் மீட்டு சிகிச்சைக்கு உதவிய சம்பவம் மனம் நெகிழ வைத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தை சேர்ந்த அமிர்தலிங்கத்தின் மனைவி சாவித்திரி. கணவன் மனைவி இருவரும் வடகாடு பேப்பர் மில் கடைவீதியில் டீக்கடை நடத்தி தங்களது நான்கு பெண் குழந்தைகளையும் காப்பாற்றி வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமிர்தலிங்கம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதன்பின் அந்த டீக்கடையை நடத்தத் தொடங்கிய சாவித்திரி அதில் வரும் வருமானத்தில் குடும்ப செலவுகளை கவனித்து வந்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டத்தை கஜா புயல் புரட்டிப் போட்டது. இந்தப் புயல் சாவித்திரியின் வாழ்வையும் சூறையாடி சென்றது. ஏனென்றால், அவர் நடத்தி வந்த கீற்றுக் கொட்டகையிலான டீக்கடையும் காற்றின் வேகத்தில் தூக்கி எறியப்பட்டு சின்னாபின்னமானது. அதேபோல், அவர்கள் வாழ்ந்து வந்த குடிசை வீடும் புயலால் சிதைந்து போக, இனி வருமானத்திற்கு வழியின்றி எப்படி வாழ்வை நகர்த்த போகிறோம் என்ற ஏக்கத்தில் பித்துப் பிடித்ததுபோல் சாவித்திரி அங்குமிங்கும் அலைய தொடங்கியுள்ளார். 

இதனையடுத்து, உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தும் அது பலனளிக்கவில்லை. இதன்பின் மனநலம் பாதிக்கப்பட்ட சாவித்திரி தான் ஏற்கனவே டீக்கடை நடத்தி வந்த சாலையில் கடந்த ஓராண்டுகளாக இரவு பகலாக வெறுமையோடு சுற்றித்திரிந்து உள்ளார். இந்நிலையில் வடகாடு காவல் நிலையத்திற்கு புதிய ஆய்வாளராக நியமிக்கப்பட்ட பரத் ஸ்ரீநிவாஸ் அந்த சாலையின் வழியே இரவு ரோந்து செல்லும் போது சாவித்திரி பல நாட்கள் அதே இடத்தில் சுற்றி திரிந்ததை கவனித்துள்ளார். இதனை அடுத்து அந்தப் பெண் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு அவரது குடும்பத்தினரை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தார். 

அப்போது சாவித்திரியின் உறவினர்கள் மனநலம் பாதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்க தங்களுக்கு எந்த வழியும் தெரியவில்லை என்று கூறியுள்ளனர். இதனையடுத்து மாவட்ட மனநல அலுவலகத்தை தொடர்பு கொண்ட பரத் ஸ்ரீனிவாஸ், சாவித்திரி நிலைமையை விளக்கிக் கூறி அவரை மனநல காப்பகத்தில் சேர்க்க பரிந்துரை செய்தார். அதற்கு மனநல மருத்துவர்களும் ஒப்புதல் அளிக்க தனது சொந்த செலவில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சாவித்திரியை வாகனத்தின் மூலம் அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து சாவித்திரியின் உறவினர்கள் கூறுகையில், “கஜா புயலால் மனநலம் பாதிக்கப்பட்ட சாவித்திரிக்கு நான்கு மகள்கள் உள்ளனர். அதில் மூவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இன்னும் ஒரு பெண் மட்டும் திருமணமாகாமல் தனியார் நிறுவனத்தில் கூலி வேலை பார்த்து வருகிறார். காவல் ஆய்வாளரின் இந்த நடவடிக்கை எங்களை மனமகிழ்ச்சி அடைய செய்துள்ளது. அரசு நடவடிக்கை எடுத்து சாவித்திரிக்கு உரிய மனநிலை சிகிச்சை அளிப்பதுடன் அவரின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்தால் முன்பை போல அவர் டீக்கடை நடத்தி தனது குடும்பத்தை காப்பாற்றி விடுவார்” எனத் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com