பெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு
சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில், ஒரு பெண்ணின் இரண்டு கால்கள் மற்றும் ஒரு கை மட்டும் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள பெருங்குடி குப்பைக் கிடங்கில் தினமும் 300க்கும் அதிகமான லாரிகளில் இருந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்தக் குப்பை கிடங்கில் பை ஒன்றில் திணிக்கப்பட்ட நிலையில், ஒரு பெண்ணின் இரண்டு கால்கள் மற்றும் ஒரு கை மட்டும் கண்டெடுக்கப்பட்டன.
35 முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் கால்கள் மற்றும் கை ஆகியவை குரோம்பேட்டை மருத்துவமனைக்கு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கைப்பற்றப்பட்ட பெண்ணின் கைகளில் பச்சை குத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கையில் உள்ள ரேகையை ஆதார் உதவியுடன் அடையாளம் காணும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெண் கொல்லப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கோடம்பாக்கம் பகுதியில் இருந்து குப்பை வண்டிகள் வந்ததால் அங்கும் போலீசார் தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.