போலீஸ் வாகனத்தில் ஏறி ‘டிக்டாக்’செய்த இளைஞர்கள்.. நூதன தண்டனை கொடுத்த காவல்துறை..!
காவல்துறை வாகனத்தின் மீது ஏறி உட்கார்ந்து ‘டிக்டாக்’ வீடியோ பதிவு செய்த இளைஞர்களை, தூத்துக்குடி போலீசார் நல்வழிப்படுத்தும் வகையில் போக்குவரத்தை சீர்செய்ய வைத்தனர்.
எந்த விஷயமாக இருந்தாலும் உடனே ‘டிக்டாக்’கில் வீடியோ பதிவு செய்து வெளியிடுவது இன்றைய இளைஞர்களிடையே பேஷனாக இருக்கிறது. ஒருசிலர் தற்போது வரம்புகளை மீறியும், அடுத்தவர்களை விமர்சனம் செய்தும் சில வீடியோக்களை வெளியிடுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதுபோல் வீடியோ வெளியிடுபவர்கள் மீது காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். ஆனாலும் அதை முழுவதுமாக தடுக்க முடிவதில்லை.
இந்நிலையில் தூத்துக்குடியில் வாகன பழுது பார்க்கும் ஒர்க்ஷாப் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை வாகனத்தின் மீது ஏறி சில இளைஞர்கள் ‘டிக் டாக்’ வீடியோவை பதிவு செய்து வெளியிட்டிருந்தனர். அது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் மூன்று இளைஞர்களை தென்பாகம் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
அதனைத்தொடர்ந்து நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரகாஷ், காவல்துறையின் பணி எவ்வளவு சிரமமானது என்பதை உணர வேண்டும் என்பதற்காக, மேற்படி செயலில் ஈடுபட்ட முனியாசாமிபுரம் பகுதியை சார்ந்த பலவேசம் என்பவர் மகன் சேகுவேரா, லெவஞ்சிபுரம் ராமர் மகன் சீனு, அதே பகுதியை சார்ந்த கோகுலகிருஷ்ணன் என்ற மூன்று இளைஞர்களுக்கும் மார்க்கெட் சிக்னலில் எட்டுமணி நேரம் போக்குவரத்து சரி செய்யும் பணியை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டனர்.
இதையடுத்து இன்று காலை 9 மணி முதல் அவர்கள் மார்க்கெட் சிக்னலில் போக்குவரத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.