போலீஸ் உடையணிந்து வடமாநில இளைஞரிடம் பணப்பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது

போலீஸ் உடையணிந்து வடமாநில இளைஞரிடம் பணப்பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது
போலீஸ் உடையணிந்து வடமாநில இளைஞரிடம் பணப்பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது

ஸ்ரீபெரும்புதூரில் காக்கி உடை அணிந்து போலீஸ் எனக் கூறி வடமாநில இளைஞர்களிடம் பணப்பறிப்பில் ஈடுபட்ட இரண்டு போலி போலீசார் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வைப்பூர் ஊராட்சியில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதில் பல்வேறு வட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் வாடகை வீட்டில் குடியிருந்தவாறு இங்குள்ள தொழிற்சாலைகளில் பணி செய்து வருகின்றனர்.

தமிழ் மொழி தெரியாத வடமாநில இளைஞர்களை குறிவைத்து இங்குள்ள இளைஞர்கள் சிலர் கஞ்சா போதையில் மது அருந்த பணம் கிடைக்காத விரக்தியில் பொதுமக்களை தாக்கி, பணம், செல்போன், செயின் பறிப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், வடமாநிலத்தைச் சேர்ந்த லுட்பூர் ரகுமான் என்பவர் வைப்பூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது புல்லட்டில் காக்கி பேண்ட் அணிந்து டிப்டாப்பாக வந்த இருவர் ரகுமானை மடக்கி தாங்கள் இருவரும் போலீஸ் எனக் கூறி நீ என்ன கஞ்சா வைத்திருக்கிறாயா எனக் கேட்டு உன்னை சோதனை செய்ய வேண்டும் என சோதனையிட்டுள்ளனர்.

சோதனையில் ஏதும் இல்லாத நிலையில், பணம் கேட்டு அவரை மிரட்டி தாக்கியுள்ளனர். இதில் பயந்துபோன லுட்பூர் ரகுமான் தன் வங்கிக் கணக்கில் வைத்திருந்த 5 ஆயிரத்தை கூகுள் பே மூலம் போலீஸ் எனக் கூறி வந்த நபரின் எண்ணுக்கு அனுப்பி உள்ளார்.

இதையடுத்து தனக்கு நடந்த சம்பவத்தை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களிடம் தெரிவிக்க கூகுள் பிளே மூலம் அனுப்பிய செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு அந்த மர்ம ஆசாமிகள் இருவரையும் இளைஞர்கள் வரவழைத்துள்ளனர்.

இதையடுத்து அங்கு வந்த இருவரையும் நீங்கள் யார் என்று இளைஞர்கள் விசாரித்தபோது எது வேண்டுமானாலும் எங்கள் அய்யாவிடம் பேசிக்கொள் என்று ஒருவரை தொடர்பு கொண்டு இளைஞர்களிடம் கொடுத்துள்ளார். இதனால் இளைஞர்களுக்கு இருவர் மீதும் சந்தேகம் ஏற்படவே ஒரகடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்ததில் அவர்கள் இருவரும் போலி போலீஸ் என தெரியவந்தது. இது தொடர்பாக லுட்பூர் ரகுமான் அளித்த புகாரின் பேரில் போலி போலீசாக வழிப்பறியில் ஈடுபட்டு சதீஷ்குமார் (34), வஞ்சுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த சரவணன் (45). ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் இருவரும் போலீஸ் எனக் கூறி பல இடங்களில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து வழிப்பறி சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம், செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com