பள்ளி மாணவிக்கு ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்ய முயற்சி - பெற்றோருடன் வாலிபர் கைது
பள்ளி மாணவிக்கு ஆசை வார்த்தை கூறி தனது மகனுக்கு திருமணம் செய்துவைக்க முயன்றதாக அவரது பெற்றோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பொட்டியபுரம்காட்டு வளவு பகுதியை சேர்ந்தவர் துக்கா. இவரது 17 வயது மகள், பண்ணப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இதேபோன்று அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் - ரங்கநாயகி தம்பதிக்கு சுரேன் (எ) சுரேஷ்குமார் என்ற மகன் உள்ளார். இவர் நெசவுத்தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில், பள்ளி மாணவியும் சுரேஷ்குமாரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்து. பெற்றோர் கண்டித்ததால் கடந்த ஆறு மாதங்களாக பள்ளி மாணவி, வாலிபர் சுரேஷுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, இருவரும் சில தினங்களுக்கு முன்பு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு இருவரும் வீடு திரும்பினர்.
இந்நிலையில், சுரேஷ் மற்றும் அவரது பெற்றோருக்கு எதிராக ஓமலூர் காவல் நிலையத்தில் மாணவி புகார் ஒன்றினை அளித்துள்ளார். சுரேஷின் பெற்றோர் தன்னிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து வைக்க முயற்சித்ததாகவும், அதேபோல், சுரேஷ் தன்னை தற்கொலைக்கு தூண்டியதாகவும் அதில் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனையடுத்து, புகாரின் அடிப்படையில், சுரேஷ் மற்றும் அவரது பெற்றோர் கோவிந்தன், ரங்கநாயகி ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து ஓமலூர் சிறையில் அடைத்தனர்.