3 மணிநேரம் தனியாக தவித்த பெண் குழந்தை - பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்

3 மணிநேரம் தனியாக தவித்த பெண் குழந்தை - பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்
3 மணிநேரம் தனியாக தவித்த பெண் குழந்தை - பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்

உசிலம்பட்டியில் 3 மணி நேரத்திற்கும் மேலாக தனியாக தவித்த 3 வயது பெண் குழந்தையை பலத்த வேலைப்பளுவின் நடுவே தாய் தந்தையை கண்டறிந்து பாதுகாப்பாக ஒப்படைத்த காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு 3 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை அழுது கொண்டிருப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்துவந்த உசிலம்பட்டி நகர் காவல்நிலைய போலீசார் குழந்தையை கைப்பற்றி, குழந்தையின் விவரங்களை கேட்டபோது அம்மாவின் பெயர் மீனா என்பதை மட்டும் முழுமையாக தெரிவித்த குழந்தை, தந்தை மற்றும் தனது பெயரை அரைகுறையாகவே தெரிவித்து அழுதுகொண்டே இருந்துள்ளது.

இந்நிலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தையைத் தேடி யாரும் வராத நிலையில் காவல்நிலையத்திலேயே குழந்தையை பாதுகாப்பாக உட்கார வைத்துவிட்டு அவரது தாய் மீனாவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சமூக வலைதளங்கள் மற்றும் ரோந்து பணியில் இருந்த காவலர்கள் என ஒரு குழு அமைத்து குழந்தையின் பெற்றோரை தேடத்துவங்கினர். குழந்தையை கைப்பற்றிய பகுதி மற்றும் பேருந்து நிலையம் என பல்வேறு பகுதிகளில் விசாரணையை நடத்திய போலீசார் சந்தைப்பகுதியில் விசாரித்து கொண்டிருந்தபோது, சந்தைப்பகுதியில் காய்கறி கடையில் கூலிவேலை செய்துவந்த கருகட்டான்பட்டியைச் சேர்ந்த மீனா என்ற பெண்ணின் குழந்தை எனக் கண்டறிந்தனர்.

தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், தானும் தனது கணவர் பாண்டியராஜனும் கூலி வேலைக்குச் சென்று வருவதாகவும், அவர்களின் மூத்த மகளான 9 வயது குழந்தையின் பாதுகாப்பில் வைத்துவிட்டு கூலி வேலைக்கு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அவர்களிடம் முறையாக எழுதி வாங்கிக்கொண்டு குழந்தையை சுமார் 3 மணி நேரத்திற்குப்பின் பத்திரமாக காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

மேலும் இன்று முதல் 30ஆம் தேதி வரை நடைபெறும் மருதுபாண்டியர் குருபூஜை, தேவர் குருபூஜை விழாவிற்காக பலத்த பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் வேலைப்பளுவின் போதும் பெண் குழந்தையை பாதுகாப்பாக மீட்டு அவரது தாய் தந்தையிடம் ஒப்படைத்த சம்பவம் குறித்து பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com